×

சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்று வீசிய மர்ம நபர்கள்: தற்கொலை செய்த ஆண் சடலமும் மீட்பு

 

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே பெண்ணை கொடூரமாக கொன்று பாலத்தின் அடியில் வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த வெள்ளக்கல் பகுதியில் வனப்பகுதி உள்ளது. தர்மபுரி -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இப்பகுதியில், நேற்று காலை ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக தொப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதற்காக, அந்த சடலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, அந்த பகுதியில், கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த பகுதி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆண் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருந்த பாலத்தின் அடியில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் பாதி நிர்வாண நிலையில் கிடந்தது.

இதனால், அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து மீட்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணின் சடலங்களை, போலீசார் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சடலமாக கிடந்த ஆண், நேற்று முன்தினம் இரவு வெள்ளக்கல் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா வாங்கியதும், அங்கிருந்த மற்றொரு கடையில் பூச்சி மருந்து பாட்டில் வாங்கியதும் தெரியவந்தது. இதனால், தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் அங்கு வந்த அந்த நபர், பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்ததும், சாவதற்கு முன்பு தான் வாங்கி வந்த புரோட்டாவை சாப்பிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, தற்கொலை செய்து கொண்ட ஆணுக்கும், சடலமாக கிடந்த பெண்ணுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அந்த பெண்ணை அப்பகுதிக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்திருக்கலாம் என்றும் அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்து, அந்த பெண்ணை கொலை செய்திருக்கலாம் என்றும் பின்னர், கொலை செய்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் இருந்த அந்த நபர், நேற்று முன்தினம் அதே பகுதிக்கு வந்து, மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்று வீசிய மர்ம நபர்கள்: தற்கொலை செய்த ஆண் சடலமும் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Salem-Dharmapuri National Highway ,Nallampally ,Dharmapuri District ,Vellakal ,Dharmapuri-Salem National Highway ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவன் கல்லால் தாக்கி கொடூர கொலை