×
Saravana Stores

வறட்சியால் மா, பப்பாளி பயிர்கள் பாதிப்பு; உழவர்களுக்கு இழப்பீடு அன்புமணி வலியுறுத்தல்


சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை; சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மழை பெய்யவில்லை. மாமரங்களில் பூக்களும், வடுக்களும் உதிர்ந்து விட்டன. தப்பிய காய்களை காப்பாற்ற டிராக்டர்களில் தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்ச வேண்டிய அவல நிலைக்கு உழவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பப்பாளி சாகுபடிக்கும் இதே நிலையை எதிர்கொண்டுள்ளனர். இன்னொருபுறம் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளும் மாம்பழத்திற்கு உரிய விலை தராமல் உழவர்களை சுரண்டி வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் டன் மாம்பழங்கள் விளைகின்றன. அவற்றில் பெங்களூரா எனப்படும் தோத்தாபுரி, அல்போன்சா வகை மாம்பழங்கள் மாம்பழக்கூழ் ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

ஆனால், அவற்றுக்கு ஆலைகள் உரிய விலை கொடுக்க மறுக்கின்றன. இதனால் மாம்பழ உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் வரையிலும், பப்பாளி உழவர்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் இழப்பு ஏற்படுகிறது. எனவே, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். மா மற்றும் பப்பாளி உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும், மாம்பழக்கூழ் ஆலைகளில் கொள்முதல் செய்யப்படும் மாம்பழங்களுக்கு கிலோவுக்கு ரூ.50 கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post வறட்சியால் மா, பப்பாளி பயிர்கள் பாதிப்பு; உழவர்களுக்கு இழப்பீடு அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,CHENNAI ,BAMA ,President ,Salem ,Dharmapuri ,Krishnagiri ,Dinakaran ,
× RELATED கால்பந்து திடல்களை தனியாரிடம்...