×
Saravana Stores

ஆம்பூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை: 2 மணி நேரம் பயணிகள் தவிப்பு

ஜோலார்பேட்டை: ஆம்பூர் அருகே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் சக்கரத்தில் பழுது ஏற்பட்டு புகை வந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. பழுது சரிசெய்யப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதிபட்டனர்.ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பயணிகளுடன் வந்தது. இரவு 7 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல்பட்டி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலின் பொதுபெட்டிகளின் சக்கரத்தில் இருந்து திடீரென புகை வந்தது. இதை கவனித்த கார்டு, உடனே இதுகுறித்து ரயில் இன்ஜின் டிரைவருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் டிரைவர் ரயிலை லூப் லைனில் நிறுத்தினார்.

இதுதொடர்பாக மேல்பட்டி மற்றும் ஜோலார்பேட்டை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அதிகாரிகளும், ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சக்கரத்தின் பிரேக் பைண்டிங் பகுதியில் பழுது ஏற்பட்டு புகை வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து ஊழியர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி பழுதை சீரமைத்தனர். அதன்பிறகு 8.50 மணியளவில் ரயில் மீண்டும் புறப்பட்டு பெங்களூர் நோக்கி சென்றது. காலதாமதம் ஏற்பட்டதால் ரயிலில் இருந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் சக்கரத்தில் ஏற்பட்ட புகையை உரிய நேரத்தில் கண்டறிந்து சரி செய்யப்பட்டதால் பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக ரயில்வே துறை சார்பில் விசாரணை நடந்து வருகிறது.

The post ஆம்பூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை: 2 மணி நேரம் பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ambur ,Jollarpet ,Ampur ,Tirupati ,Andhra Pradesh ,Bengaluru ,Karnataka ,
× RELATED ஜோலார்பேட்டை வாரச்சந்தையில் தீபாவளி...