×

விழுப்புரம் வழுதரெட்டியில் இன்று போலீசார் குவிப்பு: சுடுகாட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அங்காளம்மன் கோயில் மண்டபம் இடிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் வழுதரெட்டி சுடுகாட்டு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அங்காளம்மன் கோயில் மண்டபம் நீதிமன்ற உத்தரவின்பேரில் இன்று காலை நகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. கோயிலை இடிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் வழுதரெட்டி காலனி பகுதியில் சுடுகாடு உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து ஒரு கான்கிரீட் வீடு உள்பட 8 வீடுகளும் மற்றும் ஒரு அங்காளம்மன் கோயிலும் கட்டப்பட்டுள்ளது. நகராட்சிக்கு சொந்தமான இந்த சுடுகாடு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த ஒருவர், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கடந்த 20 நாட்களுக்கு முன் நடந்தது. அப்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் தடுத்து அப்புறப்படுத்தினர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், விழுப்புரம் நகரமைப்பு அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மேற்பார்வையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. வழுதரெட்டி காலனி தந்தை பெரியார் தெருவில் இருந்த 2 கூரை வீடுகள், ஆளில்லாத வீடு ஆகியவை அகற்றப்பட்டது. மற்ற வீடுகளை அகற்ற முற்பட்டபோது பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் 15 நாட்கள் அவகாசம் கேட்டதால், அதிகாரிகள் சென்றனர்.

இந்த அவகாசம் முடிந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு விழுப்புரம் நகராட்சி அதிகாரிகள் வந்தனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பின்னர் சுடுகாட்டு ஆக்கிரமிப்பு பகுதியில் அமைந்திருந்த அங்காளம்மன் கோயில் அருகே பெரியாயி அம்மன் உருவபொம்மை வைத்திருந்த மண்டபத்தை பொக்லைன் உதவியுடன் இடித்து அப்புறப்படுத்தினர். சுற்றுச்சுவர்களும் இடிக்கப்பட்டன. மேலும் கோயிலை இடிக்க முயன்ற போது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

The post விழுப்புரம் வழுதரெட்டியில் இன்று போலீசார் குவிப்பு: சுடுகாட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அங்காளம்மன் கோயில் மண்டபம் இடிப்பு appeared first on Dinakaran.

Tags : Villupuram Valhuthareddy police ,Angalamman Temple Mandapam ,Sudukhat ,Villupuram ,Valuthareddy ,Villupuram Valuthareddy ,