தேனி: தேனி வீரபாண்டி முல்லையாற்று தடுப்பணை பகுதியில் குளிப்பதற்கு பக்தர்கள், பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தண்ணீர் வரத்து குறைவாக இருந்த போதும் குடும்பம், குடும்பமாக குளித்து மகிழ்கின்றனர்.
தேனி அருகே வீரபாண்டி வழியாக முல்லையாறு செல்கிறது. இங்குள்ள தடுப்பணையானது பல்வேறு தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்ற பிரபலமானதாகும். தேனியில் இருந்து கம்பம், குமுளி, தேக்கடி, சபரிமலை செல்லும் பயணிகள் வீரபாண்டி முல்லையாற்றின் தடுப்பணையை ரசிக்காமல் செல்லமுடியாது. இதில் இச்சாலைவழியாக சொந்த வாகனங்களில் பயணிப்போர் முல்லையாற்று பாலம் அருகே வாகனங்களை நிறுத்தி விட்டு, தடுப்பணைக்கு வந்து குளித்து செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் தற்போது வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவிற்கான கம்பம் நடுதல் நடந்து முடிந்துள்ளதையடுத்து, கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக முல்லைப்பெரியாற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விட்டதால் தடுப்பணையின் இருகரையையும் தழுவியபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் பயணிகள் மற்றும் பக்தர்கள் தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் தற்போது ஆற்றில் நீர்வரத்து குறைந்து விட்டது. இருந்தபோதிலும் தடுப்பணையில் தேங்கியுள்ள நீரும், தடுப்பணையில் இருந்து குறைவாக விழும்நீரும் பயணிகளை வெகுவாகவே கவர்ந்துள்ளது. இதனால் நேற்று தடுப்பணை பகுதியில் காலையில் இருந்து இரவு வரை ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆற்றிலும், தடுப்பணையிலும் குளித்து நீராடி மகிழ்ந்தனர்.
மின்பாதை சீரமைப்பு
முல்லையாற்று தடுப்பணை அருகே நீண்டகாலமாக இரு கரையிலும் 31 அடி உயர மின்கம்பங்களில் இருந்து ஆற்றினை கடந்த நிலையில் எச்டி 20 கேவி மின்சார வயர் சென்றது. இந்த மின்வயர் மிகத் தாழ்வாக சென்றதால் தடுப்பணையில் குளிப்பவர்கள் கம்புகளையோ, கம்பிகளையோ கொண்டு தொட்டுவிடும் உயரத்தில் மின்வயர் சென்றது. இது தடுப்பணை பகுதிக்கு குளிக்க வருவோருக்கு அபாயமாக இருந்தது. தற்போது சித்திரை திருவிழாவையொட்டி நாள்தோறும் குளிப்பதற்காக வரும் பக்தர்கள், பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தாழ்வாக செல்லும் மின்பாதை குறித்து தமிழ்நாடுமின்சார வாரிய தேனி நகர் உபகோட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தற்போது வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத்திருவிழாவிற்கான மின்தேவை இந்த மின்பாதையின் மூலமே விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின்வாரியத்துறையினர் நேற்று இருகரைகளில் இருந்த 31 அடி உயர மின்கம்பங்களை மாற்றி 42 அடி உயர புதிய மின்கம்பங்களை நட்டனர். சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு ஆற்றின் குறுக்கே 42 அடி உயரத்தில் செல்லும்படியாக மின்பாதை சீரமைக்கப்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், “தற்போது சித்திரைத் திருவிழா நடக்கும்நிலையில், பொதுமக்களின் நலன் கருதி பழைய மின்கம்பங்களை அகற்றி, புதிய உயரமான மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு புதிய வயர்கள் மூலமாக கார்டிங் முறையில் மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.
The post வீரபாண்டி தடுப்பணையில் குளித்து மகிழ குவியும் சுற்றுலா பயணிகள்: தாழ்வான மின்பாதை உயர்த்தப்பட்டது appeared first on Dinakaran.