திருமங்கலம்: திருமங்கலம் அருகே ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்காக காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்கள் உடைக்கும் சம்பவம் மீண்டும் நடைபெற துவங்கியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருமங்கலம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தினை சேர்ந்த 38 கிராம பஞ்சாயத்துகள் உள்ளிட்டவற்றிற்கு காவிரி கூட்டுக்குடிநீர்த்திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து ராட்சகுழாய்கள் மூலமாக கூட்டுக்குடிநீர்த்திட்ட குழாய்கள் அமைக்கப்பட்டு பல நூறுகிலோமீட்டர் தூரத்திலுள்ள திருமங்கலம் நகருக்கு காவிரி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செக்கானூரணியிலிருந்து திருமங்கலம் வரும் பாதையில் பல்வேறு கிராமங்களில் ஆடு மாடு உள்ளிட்டவைகளின் தாகத்தினை தீர்க்க ஆங்காங்கே கூட்டுக்குடிநீர்த்திட்ட குழாய்கள் உடைக்கப்பட்டது. இது தொடர்பாக காவிரிகூட்டுக்குடிநீர்த்திட்ட அதிகாரிகள் மற்றும் நகராட்சி மற்றும் ஊரகவளர்ச்சி துறை அதிகாரிகள் எடுத்த தொடர் நடவடிக்கையால் குழாய் சேதப்படுத்தப்படுவது குறைந்தது.
இதனால் கோடைகாலங்களில் கூட கூட்டுக்குடிநீர்த்திட்டத்தின் கீழ் காவிரி குடிநீர் திருமங்கலம் நகராட்சி மற்றும் கிராமபுற பகுதிகளுக்கு எவ்வித தட்டுபாடுகள் இன்றி வழங்கப்பட்டு வந்தது. தற்போது கடும் கோடை வெப்பம் நிலவுவதால் கிராமபுறங்களில் கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு போயுள்ளதால் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளுக்காக மீண்டும் திருமங்கலம் பகுதியில் கூட்டுக்குடிநீர்த்திட்ட குழாய்கள் உடைக்கப்படுவது துவங்கியுள்ளது.
திருமங்கலம் செக்கானூரணி ரோட்டில் உரப்பனூர் – கரடிக்கல் இடையே நேற்று முன்தினம் இரவு யாரோ காவிரிகூட்டுக்குடிநீர்த்திட்ட குழாயை உடைத்ததால் தண்ணீர் நேற்று காலை முதல் பெருக்கெடுத்து சாலையில் வீணாகி வருகிறது. அருகேயுள்ள பள்ளத்தில் காவிரி தண்ணீர் தேங்கி நிற்பதால் திருமங்கலம் நகராட்சி மற்றும் கிராமங்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் உண்டாகியுள்ளது.
இது குறித்து நகராட்சி பொதுமக்கள் கூறுகையில், கால்நடைக்காக யாரோ ஒருசிலர் கூட்டுக்குடிநீர்த்திட்ட குழாய்களை சேதப்படுத்தியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இந்த குழாய் உடைப்பு சம்பவம் மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்னை ஏற்படும். இதனை ஆரம்பத்திலேயே கண்டு அறிந்து தடுக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றனர்.
The post திருமங்கலம் பகுதியில் கால்நடைகளுக்காக உடைக்கப்படும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்கள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.