விராலிமலை, மே 1: விராலிமலையில் நேற்று வெளுத்து வாங்கிய வெயில் 104 டிகிரியாக பதிவாகியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. அதோடு வரும் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் அறிவித்து பொதுமக்களின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது. அந்த வகையில், விராலிமலையில் நேற்று ஒரே நாளில் 104 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. பகல் முழுவதும் வாட்டி வதைத்த வெயிலினால் பொதுமக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தும் மாணவர்கள் நண்பர்களோடு இணைந்து கால்பந்து, கிரிக்கெட், கபாடி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி செல்போனில் மூழ்கி கிடப்பது பெற்றோர்களை வேதனை அடைய செய்துள்ளது. கடந்த சில மாதங்களாக முழு நாட்களையும் பள்ளியில் கழித்து வந்த தங்கள் பிள்ளைகள் கிடைத்த விடுமுறையை நண்பர்களுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாதது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வருத்தமளிக்கும் செயலாக உள்ளது என்று பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
The post விராலிமலையில் வெளுத்து வாங்கிய 104 டிகிரி வெயில் appeared first on Dinakaran.