×

சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு


சென்னை: சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்திவிட்டு தந்தையை பிச்சை எடுக்கச் செய்த இரக்கமற்ற மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டரிடம் தந்தை புகார் மனு அளித்துள்ளார். திருவள்ளூர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் ரகுநாதன் (76). ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு ரகுநாதனின் மனைவி சந்திராவை, மகன் பாலாஜி தனது வாகனத்தில் ஆவடி அடுத்த மோரை கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் சந்திரா உயிரிழந்தார். இதில் பாலாஜி செய்த விபத்தினை மறைத்து விட்டு, சந்திரா தவறி விழுந்து இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆனால் தாயார் இறந்ததற்கு செய்ய வேண்டிய எந்த சடங்குகளையும் மகன் பாலாஜி செய்ய மறுத்து விட்டார்.

சந்திரா பெயரில் ரூ18 லட்சம், 25 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், நில பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் வங்கி லாக்கரில் இருந்துள்ளன. அதற்கு மகன் பாலாஜியை வாரிசுதாரராக நியமித்துள்ளார் ரகுநாதன். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு லாக்கரில் இருந்த நகைகள், பணத்தின் ஒரு பகுதியை எடுத்து பாலாஜி செலவு செய்துள்ளார். மேலும் இதுவரை தந்தை ரகுநாதனுக்கு உணவு, மருந்து மாத்திரைகள் எதுவும் அவர் வாங்கி தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது, தனது சகோதரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து, கடந்த 26-ஆம் தேதி கடுமையாக தாக்கியுள்ளார். தந்தை ரகுநாதனையும் வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார். இதனால் திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் ஒரு வாரமாக ரகுநாதன் பிச்சையெடுத்துள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரகுநாதன் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். என் சொத்தையும், நகைகளையும் அபகரிக்க நினைக்கும் மகன் பாலாஜியிடமிருந்து என்னை பாதுகாத்து சொத்தை மீட்டு தர வேண்டும். அதற்கு உடந்தையாக இருக்கும் அவரது மனைவி, மாமனார், மைத்துனர் ஆகியோர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் ரகுநாதன் தெரிவித்துள்ளார்.

The post சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Raghunathan ,Bharathidasan Street, Tiruvallur ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்