×

மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தங்களில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்: நிர்வாகம் தகவல்


சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் அல்லாமல் வாகனங்களை நிறுத்துவோருக்கு உயர்த்தப்பட்ட கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருகிறது, என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களின் பயன்பாட்டில் பின்வரும் மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி கடந்த 30 நாட்களில் குறைந்தது 15 பயணங்கள் செய்த மெட்ரோ பயணிகளுக்கு மாதாந்திர பாஸ் வசதி, விம்கோ நகர் பணிமனை, ஸ்ரீ தியாகராயா கல்லூரி, நேரு பூங்கா, கோயம்பேடு, அசோக் நகர் மற்றும் ஆலந்தூர் மெட்ரோ ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய வண்ணாரப்பேட்டை, நந்தனம், எழும்பூர் மற்றும் ஷெனாய் நகர் ஆகிய 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் இட வசதி இல்லாத காரணத்தினால் மாதாந்திர பாஸ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்களில் பயணிக்காமல் வாகன நிறுத்தும் வசதியை மட்டும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் திருவொற்றியூர், திருவொற்றியூர் தேரடி, காலடிப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர் நீதிமன்றம், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி, நந்தனம், கிண்டி, ஆலந்தூர், நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம், விமான நிலையம், அசோக் நகர், திருமங்கலம், மற்றும் எழும்பூர் மெட்ரோ என 18 மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ பயணிகள் அல்லாதவர்களின் வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 30 நாட்களில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாதவர்கள் அல்லது 15க்கும் குறைவான பயணம் செய்தவர்களுக்கு அரும்பாக்கம் மெட்ரோ மற்றும் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் கட்டணத்தில் எவ்வித மாற்றம் இல்லை. அதன்படி விம்கோ நகர், டோல்கேட், தண்டையார்பேட்டை, ஆயிரம் விளக்கு, டிஎம்எஸ், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, சின்னமலை, கீழ்ப்பாக்கம், பச்சையப்பா கல்லூரி, கிழக்கு அண்ணாநகர், அண்ணாநகர் டவர், ஈகாட்டுத்தாங்கல் ஆகிய 13 மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் அல்லாத 2 சக்கர வாகனங்களை 6 மணி நேரம் நிறுத்துவதற்கு ரூ20, 12 மணி நேரத்திற்கு ரூ30, 12 மணி நேரத்திற்கு மேல் ரூ40 மற்றும் பயணிகளின் வாகனங்களை 6 மணி நேரத்திற்கு ரூ10, 12 மணி நேரத்திற்கு ரூ15, 12 மணி நேரத்திற்கு மேல் ரூ20 என மாற்றப்பட்டுள்ளது. இதபோல், பயணிகள் அல்லாத 4 சக்கர வாகனங்கள் 6 மணி நேரத்திற்கு ரூ30, 12 மணி நேரத்திற்கு ரூ40, 12 மணி நேரத்திற்கு மேல் ரூ60 மற்றும் பயணிகளின் 4 சக்கர வாகனங்களை 6 மணி நேரத்திற்கு ரூ20, 12 மணி நேரத்திற்கு ரூ30, 12 மணி நேரத்திற்கு மேல் ரூ40 என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் பயணிகள் அல்லாத 2 சக்கர வாகனங்களை நிறுத்த மாதாந்திர கட்டணமாக ரூ750, 24 மணி நேரம் நிறுத்துவதற்கு ரூ1500, மெட்ரோ கார்டு உள்ளவர்கள் ஒருமாதத்திற்கு 15 முறை பயணம் செய்து வாகனத்தை நிறுத்தினால் ரூ500, மெட்ரோ கார்டு உள்ளவர்கள் மாதம் முழுவதும் ரயில் பயணம் மேற்கொண்டால் அவர்களுக்கு ரூ250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அல்லாதவர்கள் 4 சக்கர வாகனத்தை நிறுத்தினால் அவர்களுக்கு மாதம் ரூ1000, மெட்ரோ கார்டு உள்ளர்கள் மாதம் 15 முறை பயணம் செய்து 4 சக்கர வாகனத்தை நிறுத்தினால் ரூ700, மெட்ரோ கார்டு வைத்திருந்து மாதம் முழுவதும் பயணிக்கும் பயணிகளுக்கு மாதம் ரூ500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது, என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தங்களில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்: நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,metro administration ,Chennai Metro Rail Corporation ,Dinakaran ,
× RELATED சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ...