புதுடெல்லி: மணிப்பூர் கலவரத்தில் 2 பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. மணிப்பூரில் பழங்குடியின குக்கி மற்றும் பெரும்பான்மையான மெய்டீஸ் சமூகத்தினர் இடையே கடந்த ஆண்டு மே 3ம் தேதி கலவரம் வெடித்தது. அதற்கு அடுத்த நாள் 2 பழங்குடியின பெண்களை மெய்டீஸ் பிரிவைச் சேர்ந்த 1000 பேர் கொண்ட கும்பல் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ கடந்த ஆண்டு ஜூலையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, தற்போது கவுகாத்தி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: காங்போக்பி மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்குள் புகுந்த கும்பல் பலரையும் தாக்கியது. அவர்களிடமிருந்து தப்பிக்க பாதிக்கப்பட்ட பெண் பிற கிராமமக்களுடன் சேர்ந்து காட்டுப் பகுதிக்குள் ஓடி உள்ளார். அப்போது கும்பலை சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம், சாலைப் பகுதியில் போலீஸ் வாகனம் நிற்பதாகவும் அங்கு சென்று உதவி கேட்குமாறும் கூறி உள்ளனர். அதை நம்பி அந்த பெண்ணும், மற்றொரு பாதிக்கப்பட்ட பெண்ணும் போலீஸ் ஜீப் நோக்கி சென்றுள்ளனர். அந்த ஜீப்பில் அடைக்கலம் தேடி குக்கி இனத்தை சேர்ந்த ஆண் ஒருவர் இருந்துள்ளார். 2 போலீசார், டிரைவர் தவிர மேலும் சிலர் ஜீப் அருகே இருந்துள்ளனர். தங்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லும்படி பாதிக்கப்பட்ட 2 பெண்கள் போலீசாரிடம் கெஞ்சி உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர் கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் வீரர்.
ஆனால் ஜீப்பின் சாவி இல்லை என போலீசார் கூறி உள்ளனர். சிறிது நேரத்திற்குப்பிறகு 2 பெண்களையும், ஆண் ஒருவரையும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு டிரைவர் புறப்பட்டுள்ளார். அவர் நேராக கும்பலை நோக்கி ஜீப்பை ஓட்டி உள்ளார். சுமார் 1000 பேர் கொண்ட கும்பலை பார்த்ததும் காப்பாற்றுமாறு அவர்கள் கெஞ்சி உள்ளனர். ஆனால் ஜீப்பை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி உள்ளார். அங்கு வந்த கும்பல் 2 பெண்களையும் நிர்வாணமாக்கி பலாத்காரம் செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். போலீஸ் வாகனத்தில் இருந்த நபரின் தந்தையையும் அவர்கள் அடித்து கொலை செய்துள்ளனர். இவ்வாறு குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
The post மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2 பழங்குடி பெண்களை வன்முறை கும்பலிடம் விட்டுச் சென்ற போலீஸ்: அடைக்கலம் தேடியவர்களுக்கு அநியாயம்; சிபிஐ குற்றபத்திரிகையில் பகீர் தகவல் appeared first on Dinakaran.