×

திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம்

திருப்போரூர்: கேளம்பாக்கத்தை அடுத்த கண்டிகை பகுதியை ேசர்ந்த மணி என்பவரது மகள் காயத்ரி (22). இவருக்கும் சென்னை பழவந்தாங்கலை சேர்ந்த சரத்சந்திரன் (28) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. சரத்சந்திரன் சென்னை சிறுசேரி சிப்காட்டில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். திருமணமாகி 3 மாதங்கள் ஆன நிலையில் தாலி கயிறு மாற்றும் சடங்கிற்காக சரத்சந்திரன் தனது மனைவியுடன் கண்டிகையில் உள்ள காயத்ரியின் பெற்றோர் வீட்டிற்கு வந்தார். சடங்கு நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில் சரத்சந்திரன் நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று விட்டார்.

பின்னர், பிற்பகல் 1 மணியளவில் காயத்ரிக்கு போன் செய்தார். நீண்ட நேரமாகியும் அவர் போன் எடுக்காததால், சரத்சந்திரன் தனது மாமனாருக்கு போன் செய்து காயத்ரி போனை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். அதற்கு மணி காயத்ரி திடீரென காணாமல் போய் விட்டதாகவும், அவரைத்தான் ேதடிக்கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சரத்சந்திரன், அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காயத்ரியின் கைப்பை அவர்கள் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றடியில் உள்ளதாக பக்கத்து வீட்டார் தெரிவித்தனர்.

இதையடுத்து தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் சிறுசேரி தீயணைப்பு படையினர், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி தேடியபோது, இறந்த நிலையில் காயத்ரியின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இளம்பெண் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், காயத்ரி கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் appeared first on Dinakaran.

Tags : Gayatri ,Yesaranda Mani ,Kandigai ,Kelambakkam ,Sarathchandran ,Palavanthankal, Chennai ,Sirupcheri Chipgat, Chennai ,
× RELATED மனவெளிப் பயணம்