×

உப்பு சத்தியாகிரக போராட்ட 93ம் ஆண்டு நினைவு தினம்; வேதாரண்யத்தில் காங்கிரசார் உப்பு அள்ளினர்: செல்வபெருந்தகை பங்கேற்பு

வேதாரண்யம்: உப்பு சத்தியாகிரக போராட்ட 93ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வேதாரண்யத்தில் இன்று காங்கிரஸ் கட்சியினர் உப்பு அள்ளினர். இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்கள் உப்புக்கு வரி விதித்து பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தினர். இதை எதிர்த்து மகாத்மா காந்தி, தண்டி சபர்மதி ஆசிரமத்தில் இருந்து பாதயாத்திரையாக சென்று உப்பு சத்தியாகிரக போராட்டத்தை 1930 ஏப்ரல் 30ம் தேதி நடத்தினார். அதே நாளில் ராஜாஜி தலைமையில் விடுதலை போராட்ட வீரர்கள் திருச்சியில் இருந்து நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்கு நடந்து வந்து உப்பு சத்தியாகிரக போராட்டம் நடத்தினர். சர்தார் வேதரத்தினம் தலைமையில் ராஜாஜி, அகஸ்தியன்பள்ளியில் உப்பு அள்ளினார்.

இந்தநிலையில் உப்பு சத்தியாகிரக 93வது நினைவு பேரணி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தியாகி டிஎஸ்எஸ் ராஜன் பங்களா முன்புள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபி அருகில் இருந்துகடந்த 28ம் தேதி புறப்பட்டது. கமிட்டி தலைவர் சக்தி செல்வகணபதி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நேற்று வேதாரண்யத்துக்கு சத்தியாகிரக யாத்திரை வந்தது. அங்கு வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் குழுவினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

இன்று காலை 6.30 மணிக்கு வேதாரண்யம் வடக்கு வீதியில் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் இருந்து பேரணி புறப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் ஒன்றிய அமைச்சர் தங்கபாலு, மயிலாடுதுறை முன்னாள் எம்பி ராஜேந்திரன், சுதந்திர போராட்ட தியாகி சர்தாரின் பேரன் வேதரத்தினம், மாநில அமைப்பு செயலாளர் ராம்மோகன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போஸ் மற்றும் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று 5 கிமீ பேரணியாக அகஸ்தியன்பள்ளியில் உள்ள நினைவு ஸ்தூபிக்கு சென்றனர். பின்னர் நினைவு ஸ்தூபி அருகே உப்பு அள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

The post உப்பு சத்தியாகிரக போராட்ட 93ம் ஆண்டு நினைவு தினம்; வேதாரண்யத்தில் காங்கிரசார் உப்பு அள்ளினர்: செல்வபெருந்தகை பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Salt Satyagraha ,Vedaranyam ,Selvaperunthakai ,salt satyagraha struggle ,Congress party ,Tamil Nadu ,Congress ,President ,freedom struggle ,Dinakaran ,
× RELATED வேதாரண்யத்தில் நாளை உப்பு...