×
Saravana Stores

உப்புக்கோட்டை விலக்கு அருகே தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி தீவிரம்

தேனி: தேனி அருகே வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி வீரபாண்டியில் இரு இடங்களில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற மே 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்க உள்ளது. இவ்விழாவிற்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். பகல், இரவு என நாள் முழுவதும் நடக்கும் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் சாமி கும்பிட்ட பின்னர், குடும்பத்துடன் குதூகலிக்கும் வகையில் கோயில் வளாகத்தில் பொழுது போக்கு அம்சங்கள் நடத்தப்படுவது வழக்கம்.

இதில் சிறுவர்கள், குழந்தைகள் குதூகலிக்கும் வகையில் பல்வேறு வகையான ராட்டினங்கள், பேன்சிக்கடைகள், மாயாஜால வித்தைகள், சர்க்கஸ் நடத்தப்படுவது வழக்கம். பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இத்திருவிழாவில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இத்தகைய சிறப்பு பேருந்துகளில் தேனி, போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் தேனியில் இருந்து வீரபாண்டி செல்லும் வழியில் உப்புக்கோட்டை பிரிவை தாண்டி தனியார் இடத்திலும், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் வீரபாண்டியில் இருந்து கம்பம் செல்லும் சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகேயும் இரு இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல, வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக இவ்விரு தற்காலிக பஸ் நிலையங்களின் அருகேயும் தற்காலிக கழிப்பறைகள் அமைக்கும் பணியில் நடந்து வருகிறது. மேலும், தேனியில்இருந்து வீரபாண்டி செல்லும் சாலை வீரபாண்டியில் இருந்து கம்பம் செல்லும் சாலையில் உப்புக்கோட்டை விலக்கில் இருந்து வீரபாண்டி வரையிலும், வீரபாண்டியில் இருந்து பை-பாஸ் பிரிவு இணைப்பு சாலை வரையும் தற்காலிக மின்விளக்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

The post உப்புக்கோட்டை விலக்கு அருகே தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Uplukkottai ,Theni ,Veerapandi ,Gaumariamman temple idol festival ,Veerapandi Gaumariamman temple festival ,
× RELATED கூட்டுறவு சங்கங்களில் இன்று கடன் மேளா முகாம்