வேலூர்: கொளுத்தும் வெயிலில் மக்களை குளிர்விக்கும் கோடை விழா, இந்த ஆண்டாவது நடத்தி பயணிகள் ஏக்கம் தீர்க, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் மாவட்டம் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பரில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என்று 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுவதற்கு முன்பு வரை ஏலகிரி மலையில் ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாதங்களில் கோடை விழா கொண்டாடப்படும். கோடைவிழாவில் மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் என அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அரங்கங்கள், நிகழ்ச்சிகள் என்று கோடை விழா களைக்கட்டும். இக்கோடை விழாவுக்காக மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்களும் ஏலகிரிக்கு விடப்படும். ஆனால் மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு அடுத்த ஆண்டே கொரோனா பெருந்தொற்று ஊரடங்கால் கோடை விழா என்பது மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு உதயமான திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தால் கொண்டாடப்படவில்லை.
அதேநேரத்தில் அப்போது இருந்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் கோடை விழா கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஆலோசனை கூட்டம் கடந்த 2023ம் ஆண்டு மே 8ம் தேதி ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆனால் அத்துடன் அதுபற்றிய பேச்சு அடங்கிப்போனது. அதேபோல் மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு வேலூர் மாவட்டத்தில் கோடை விழாவை தொடர்ந்து கொண்டாட வேண்டும். அதற்கான தட்பவெப்ப சூழ்நிலையுடன் மாவட்டத்தில் அமைந்துள்ள அமிர்தி, பாலமதி, பேரணாம்பட்டு அரவட்லா அல்லது பத்தலப்பல்லி, குடியாத்தம் மோர்தானா, அணைக்கட்டு அடுத்த பீஞ்சமந்தை, மேலரசம்பட்டு, வேலூர் கோட்டை பெரியார் பூங்கா ஆகியவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் கோடை விழா கொண்டாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதற்கேற்ப பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா மலை கிராமத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகளும் நடந்தன. ஆனால் ஏனோ, கோடை விழா, மாவட்ட நிர்வாகத்தினால் அங்கு நடத்தப்படவில்லை.
அதேபோல், ஆந்திர கவுண்டன்யா வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கவுண்டன்யா நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணையுடன் உள்ள மோர்தானா கிராமம் இதமான தட்பவெப்ப சூழலுடன் கொண்ட பகுதியாகும். மூன்று பக்கம் மலைகள் சூழ்ந்து, அணைப்பூங்கா, சுற்றிலும் தென்னந்தோப்புகள், அடர்ந்த வனப்பகுதி என அழகாக அமைந்துள்ள மோர்தானாவில் கோடை விழாவை கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் வைத்துள்ளனர். ஏறத்தாழ இதே இதமான சூழலுடன் நான்கு பக்கமும் மலைகள் சூழ்ந்து, மலட்டாற்றின் கரையில் அமைந்துள்ள பத்தலப்பல்லி கிராமமும் கோடை விழாவுக்கு ஏற்ற இடம்தான் என்கின்றனர் பேரணாம்பட்டு பகுதி மக்கள். அத்துடன், அணைக்கட்டு அடுத்த ஜவ்வாது மலையில் அமைந்துள்ள பீஞ்சமந்தை, உத்திரக்காவேரி நதிக்கரையில் அமைந்துள்ள மேலரசம்பட்டு கிராமங்களும் கோடை விழாவுக்கு ஏற்ற இடம். ஏற்கனவே உத்திரக்காவேரி குறுக்கே அணை கட்டும் திட்டம் உள்ளதால், அதனுடன் சேர்த்து பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்து இங்கு கோடை விழா கொண்டாடப்பட வேண்டும் என்பது எங்கள் விருப்பம் என்கின்றனர் அணைக்கட்டு வட்டார மக்கள். இவ்வாறு வேலூர் மாவட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்கள் கோடை விழா கொண்டாட்டத்துக்கு ஏற்ற இடங்களாக உள்ளது. எனவே ேகாடை விழா கொண்டாட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதேேபால், ராணிப்பேட்டை மாவட்டம் கொஞ்சம் வித்தியாசமான மாவட்டம்.
தொழிற்சாலைகள் நிறைந்த இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் கடந்து செல்லும் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாகவும் ராணிப்பேட்டை உள்ளது. இதுதவிர சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ் சாலையும் இம்மாவட்டம் வழியாகவே செல்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கோடை விழாவை கொண்டாடுவதற்கு இதமான தட்பவெப்ப நிலை கொண்ட ஆற்காடு அடுத்த புங்கனூர் கிராமம், பாகவெளி கிராமம், பரந்த ஏரியை கொண்ட காவேரிப்பாக்கம், திருப்பாற்கடல் போன்ற கிராமங்கள் உள்ளன. இவற்றில் ஏதாவது ஒரு கிராமத்தை தேர்வு செய்து சுற்றுலா மேம்பாட்டு பணிகளை விரைந்து மேற்கொண்டு கோடை விழாவை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இம்மாவட்ட மக்களுக்கும் கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வருகிறது. கொளுத்தும் வெயிலில் மக்களை குளிர்விக்கும் கோடைவிழா, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் நடத்தி, கோடை விழா ஏக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசும், மாவட்டங்களின் நிர்வாகங்களும் உரிய நடவடிக்கையை இந்த ஆண்டாவது எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும், கோரிக்கையுமாக உள்ளது.
The post வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொளுத்தும் வெயிலில் மக்களை குளிர்விக்கும் கோடை விழா இந்தாண்டு கொண்டாடப்படுமா? ஆண்டுதோறும் எதிர்பார்க்கும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.