×

உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு: தொழிலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி “மே தின” வாழ்த்து..!!

சென்னை: தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின வாழ்த்துகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகிற்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய மே தினத் திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

உழைப்பாளர்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டு மறுக்கப்பட்டதை எதிர்த்து, ஓயாது போராடிய தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும்; உடல் உழைப்பின் அத்தியாவசியத்தையும், அதன் மேன்மை மிக்க சிறப்பினையும் உலகிற்கு உணர்த்துகின்ற திருநாளாகவும் மே தின திருநாள் விளங்குகிறது. உழைப்பாளர்களுக்குள் உயர்வு, தாழ்வு இல்லை; அவர்களிடையே வேறுபாடு இல்லை; உழைப்போர் அனைவரும் சரிநிகர் சமமானவர்களே. இதைத் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., “ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே! உழைக்கும் மக்கள் யாவரும், ஒருவர் பெற்ற மக்களே!” என்று உழைப்பின் மாண்பினையும், உழைப்பாளர்களின் பெருமைகளையும் உயர்த்தி உள்ளார்.

உழைக்கும் தொழிலாளர்கள் அனைத்து நிலைகளிலும் உயர்ந்து விளங்கிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர், தங்களது ஆட்சிக் காலங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். அதேபோல், ஜெயலலிதா நல்லாசியோடு செயல்பட்ட கழக ஆட்சியிலும் தொழிலாளர்களுடைய நலன்கள் அனைத்து வகைகளிலும் பாதுகாக்கப்பட்டது என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு நினைவுகூர விரும்புகிறேன்.

உழைப்பில் தான் உடல் உறுதி பெறும்; உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும். நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம் என்பதைத் தெரிவித்துக்கொண்டு, அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆகியோரது வழியில், எனது நெஞ்சார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு: தொழிலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி “மே தின” வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Eadapadi Palanisami ,Chennai ,H.E. ,Secretary General ,Edappadi Palanisami ,Dinakaran ,
× RELATED 3வது நாளாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை