×
Saravana Stores

மண்ணச்சநல்லூரில் ரூ.38 லட்சம் செலவில் பூமிநாதர் கோயில் திருப்பணி: பக்தர்கள் எதிர்பார்ப்பு

சமயபுரம்: மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள மிகவும் பழமையான பூமிநாதர் சுவாமி கோயில் திருப்பணி பாதியிலேயே நிற்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மண்ணச்சநல்லூரில் தர்மசம்வர்தினி அம்பாள் சமேத பூமிநாதர் கோயில் அமைந்துள்ளது. சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் சிவபெருமானின் கோயில் வீடோ, மனையோ, நிலமோ பிரச்னை இல்லாமல் அமைய மற்றும் வீடு கட்டும் யோகம், நிலம் விற்கும் யோகம், பூமி தோஷம், பில்லி, சூனியம், ஏவல், எந்திரம், தந்திரம், மந்திரம், தோஷம், தென் மூலை உயரம், வடமூலை உயரம், சொத்து பாகப் பிரச்னை, ஜன்ம சாப – பாப தோஷம், வாஸ்து தோஷம், பழைய வீடு புதுப்பிக்கும் யோகம், வீடு கண் திருஷ்டி தோஷம் ஆகிய 16-ம் முக்கியம்.

இந்த 16 விதமான தோஷங்களையும் இத்திருக்கோயில் பூமிநாத சுவாமி நீக்குவதாக மாமுனிவர் அகத்தியர் தனது ஓலைச்சுவடியில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளன. தோஷங்கள், அனைத்தையும் பிரச்னைகள் ஒட்டுமொத்தமாக நீக்கி, யோகமான வீடு, மனை, நிலம் அமைய, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரிலுள்ள அறம்வளர்த்த நாயகி உடனுறை பூமிநாத சுவாமி கோயிலில் மண் வழிபாட்டு முறை செய்து, சுவாமி மற்றும் அம்மனை வழிபட்டால் பலன்கள் அனைத்தையும் பெறலாம் என இக்கோயிலின் ஐதீகம். இந்நிலையில் இக்கோயிலை பழமை மாறாமல் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.

இதையடுத்து கடந்த வருடம் இத்திருக்கோயிலுக்கு ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து திருச்சி மண்டல இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் பிரகாஷ், நிர்வாக பொறியாளர் தியாக ராஜன், உதவி செயற்பொறியாளர் கவுதமன், கோயில் நில அளவை வட்டாட்சியர் கண்ணன், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் செயல் அலுவலர் மனோகரன் ஆகியோர் கோயிலின் கொடிமரம், உள்பிரகாரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து இதில் இக்கோயிலின் பழமை மாறாமல் திருப்பணிகள் செய்து கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் நட்தத முடிவு செய்தனர்.

மேலும் கும்பாபிஷேகம் பணிக்காக சீரமைப்புப்பணிகளை துவக்குவதற்கான கடந்த வருடம் டிசம்பர் 15 ம் தேதி பாலாலய பூஜை நடைபெற்றது. இந்நிலையில் துவக்கத்தில் பணிகள் துரிதமாக நடந்தன. கருவறை, கோபுரங்கள், அம்மன், சிவன், நவக்கிரகங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ள நிலையில் அதன் பழமை மாறாமல் கோபுரங்களில் வர்ணம் பூசுவதற்காக தட்டிகள் அமைத்து பல மாதங்களாகியும் திருப்பணி ஏதும் நடைபெறாததால், பக்தர்கள் வேதனையில் உள்ளனர். மேலும் பணிகளை விரைவில் முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று சிவ தொண்டர்கள், பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மண்ணச்சநல்லூரில் ரூ.38 லட்சம் செலவில் பூமிநாதர் கோயில் திருப்பணி: பக்தர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Bhuminathar ,Mannachanallur ,Samayapuram ,Bhuminathar Swamy temple ,Kumbabishekam ,Dharmasamvardini Ambal Sametha Bhoominath Temple ,Mannachanallur.… ,Bhoominath temple ,
× RELATED திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில்...