×
Saravana Stores

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் பழுதில்லாமல் இயங்க வேண்டும், டிரோன்களுக்கு தடை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக வலியுறுத்தல்


சென்னை: திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்பி நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து மனு அளித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் எந்த பழுதும் இல்லாமல் இயங்க வேண்டும், வாக்கு எண்ணிக்கைக்காக ஸ்டிராங் ரூம் திறக்கப்படும் வரை சிசிடிவிக்கள் இயங்க வேண்டும். அதுவரை சிசிடிவி காட்சிகளை வேட்பாளர்களின் ஏஜென்டுகள் அல்லது வேட்பாளர்கள் பார்க்க விரும்பினால் வழங்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் மனு வழங்கி உள்ளோம்.

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமுக்கு குறைந்தபட்சம் 500 மீட்டர் சுற்றளவுக்கு எந்தவிதமான டிரோன் போன்ற சாதனங்களை இயக்க அனுமதிக்க கூடாது, அதற்கான உத்தரவுகளை காவல் துறைக்கு தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று கோரிக்கையாக கொடுத்திருக்கிறோம். அவர் எங்கள் கோரிக்கையை ஏற்று, 500 மீட்டர் சுற்றளவுக்கு டிரோன் பறக்காமல் தடுக்க முடியுமா? என்பதற்கான அறிவிக்கையை காவல் துறைக்கு அனுப்புவதாக சொல்லி இருக்கிறார். சிசிடிவி கேமராக்கள் நிச்சயமாக பழுதடையாமல் பார்த்துக் கொள்வோம் என்ற உறுதி கொடுத்திருக்கிறார். எலக்ட்ரிக் ஷார்ட் சர்க்யூட் காரணமாக 20 நிமிடம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா நீலகிரியில் பழுதாகி இருக்கிறது. எல்லா வேட்பாளர்களையும், அவர்களின் ஏஜென்டுகளையும் கூட்டிப்போய் ஸ்டிராங் ரூமை காண்பித்துள்ளனர்.

தற்போது சரியாக இருக்கிறது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. வெயில் காரணமாக இதுபோன்ற நடக்காமல் இருக்க, குளிரூட்டும் சாதனங்கள் வைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950ன் படி தயாரிக்கப்படக்கூடிய பட்டியல். இதை தயாரிப்பது தேர்தல் ஆணையத்தின் முழுமையான பணி. அதில் வேறு யாரும் தலையிட முடியாது. அரசியல் கட்சிகளும், குறிப்பாக வாக்காளர்களும் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதை தேர்தலுக்கு முன் உறுதி செய்ய வேண்டியது கடமை. இதை மக்களோடு பணியாற்றக்கூடிய அரசியல் கட்சிகள் எல்லோரும் செய்வார்கள். வாட்ஸ்அப், பேஸ்புக் மட்டும் வைத்து கட்சி நடத்துபவர்களுக்கு அது தெரியாது. அவர்கள் அந்த சட்டத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் பழுதில்லாமல் இயங்க வேண்டும், டிரோன்களுக்கு தடை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : DMK ,Tamil Nadu ,Chief Electoral Officer ,CHENNAI ,DMK Legal Department ,NR Ilango ,Tamil ,Nadu ,Sathyaprada Chagu ,Chief Secretariat ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியல்...