×
Saravana Stores

மனவெளிப் பயணம்

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி

மன பாதிப்பின் மூன்று நிலைகள்!

எல்லா மனிதர்களும் கை விடும் போது நாம் அழுகிறோம்,
ஆனால் மீண்டும் ஒரு கையை தேடிக் கொண்டு தானே இருக்கிறோம். –
கவிஞர் நரன்,

அவர்கள் எழுதிய இந்த வரிகள் ஒரு ஆத்மார்த்தமான உணர்வைக் கொடுக்கும். ஒவ்வொரு நபரும் தங்களுடைய கஷ்ட காலங்களில் எந்தக் கையாவது நம்மை தூக்கி விடாதா என்று தேட வைக்கும். ஆனால் சில நேரங்களில் நமக்கு ஆதரவாக கிடைக்கின்ற கைகளை என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல், செய்யும் சில விஷயங்களைப் பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம்.

சில நேரங்களில் காதலிப்பவர்களுக்கு இடையில் புரிதலில் பிரச்னை ஏற்படும் போது, காதலிப்பவரில் ஒருவர் தங்களது கைகளை கீறிக்கொண்டு, காதலனோ/காதலியோ தவறாக புரிந்து கொண்ட வலியை விட இந்த வலி பரவாயில்லை என்று கூறுவதை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். அதற்கு உடனே, கூட இருந்த மற்றொரு துணையும் தங்களது காதலை நிரூபிக்க அவர்களது கையையும் கீறிக் கொண்டு வந்து நிற்பார்கள். உனக்கான வலியை, நானும் உணர்ந்து கொள்ள வேறு வழி தெரியவில்லை என்பார்கள்.

உண்மையில் மேலே சொன்ன சம்பவத்தை நாம் கேள்விப்படும் போதோ அல்லது பார்க்கும் போதோ நமக்குத் தோன்றுவது, ஏன் இப்படி வாழ்க்கையை தொலைக்கிறார்கள் என்ற அடிப்படையான, சாதாரணமான கேள்வி தான் எழும். சிலருக்கு, அந்தக் காதலைப் பார்க்கும் போது அது ஒரு பைத்தியகாரத்தனம் என்பார்கள். இருவரது கைகளில் இருக்கும் காயங்களைப் பார்த்து, வேறு சிலருக்கு தெய்வீகமான காதல் என்றும் கூற வாய்ப்புள்ளது. உண்மையில் தாங்கள் மிகவும் நேசிக்கும் நபர் செய்யும் விபரீதமான விஷயங்களை கூட இருப்பவர்களும் செய்வதால் ஏற்படும் பாதிப்புகளை உளவியலில் Shared Psychosis என்று கூறுவார்கள்.

பகிரப்படும் மனபாதிப்பு என்றொரு கருத்துரு உண்டு. இதனை Shared Psychosis என்பார்கள். இது சில வகைப்படும். அதில் குறிப்பாக மூன்றை மட்டும் நாம் பார்ப்போம். ஏனென்றால் இந்த மூன்று வகைதான், தற்போது பெரிய சவால்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

திணிக்கப்படும் மனபாதிப்பு (Imposed Psychosis):

இதற்கு உதாரணமாக குணா திரைப்படத்தை எடுத்துக் கொள்வோம். இந்தப் படத்தில் ஹீரோ கமல் மனநிலை பாதிக்கப்பட்ட நபராக இருப்பார். ஹீரோயின் ரோஷினி நார்மலான ஒரு நபராக இருப்பார். ஆனால் கமல் கடத்தி வைத்துக் கொண்ட பின்னர், ஹீரோயினும் கமலின் மனநிலை பற்றியோ, கமலின் கற்பனைக் கதைகள் பற்றியோ அலட்டிக் கொள்ள மாட்டார். ஒரு காமெடியில் வடிவேலு சூர்யாவிடம் கூறுவார், தீவிரவாதி உன்கூட இருந்து, தன்னோட மூளையும் அவருக்கு நண்பராக மாறி விட்டது என்பார்.

அதே போல், கமலின் மனநிலைக்கு ஆதரவாக ஹீரோயின் மனநிலையும் மாறி விடும். இதைத்தான் Imposed Psychosis என்பார்கள். குடும்பத்தில் யாரோ ஒருவருக்கு, மனரீதியாக தங்களை யாரோ பின் தொடர்கிறார்கள் என்றும், தங்களைப் பற்றி தொடர்ந்து பேசுகிறார்கள் என்றும் துணையிடமோ அல்லது குடும்ப உறுப்பினரிடமோ அடிக்கடி கூறும் போது, அவர்களும் அதை நம்பி விடுவார்கள். ஏனென்றால், உதாரணமாக அவர்களுக்கு சிந்திக்கும் திறன் (Learning Disability) குறைவாக இருக்கும் போதும், உளவியல் சார்ந்த விழிப்புணர்வு எதுவும் இல்லாத போதும் எளிதாக, அவர்கள் மிகவும் நம்பக் கூடிய நபர்கள் கூறுவதை அப்படியே எடுத்துக் கொள்வார்கள்.

அதனால் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கூட இருந்து சொன்னதைக் கேட்டதற்கு, அவர்களின் மனநலனும் பாதிக்கப்பட ஆரம்பிக்கும். மனதால் குழப்பநிலையில் இருப்பவர்களுக்கு, தங்களுக்குப் பிடித்தவர்களை அல்லது தங்களது வார்த்தைகளை நம்புகிறவர்களை அத்தனை எளிதாக விட்டு விட மாட்டார்கள். அதனால், கூட இருக்கும் நபரின் வாழ்க்கையும் சில நேரங்களில் குழப்ப நிலைக்கு போய் விடும். Imposed Psychosis இல் உள்ள ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், மனநலம் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்ந்து இருப்பவரை, கொஞ்ச நாள் பிரித்து, அவருக்குத் தேவையான மனநலம் சார்ந்த பாதிப்புகள் மற்றும் சிகிச்சை எடுக்கும் போது ஓரளவுக்கு புரிந்து, அவரை பாதுகாக்க முடியும்.

பரஸ்பர மனபாதிப்பு (Simultaneous Psychosis)

பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் மனசுக்குள் மத்தாப்பு என்ற படத்தை வைத்து தெரிந்து கொள்ள முடியும். ஹீரோ பிரபுவுக்கு தன் காதலி இறந்தவுடன் பைத்தியமாகி விடுவார். அதற்காக சிகிச்சைக்கு மனநல மருத்துவமனைக்கு வருவார். அங்கு மனநல மருத்துவராக சரண்யா பிரபுவுக்கு சிகிச்சை அளிப்பார். அதற்காக பிரபு கூறும் கற்பனை கலந்த கதைகளை அவரும் கேட்டு ரசிப்பார். அதற்கு எதிர்வினையோ அல்லது அமைதியாகவோ கடந்து செல்ல மாட்டார். பிரபு விரும்பும் அத்தனை செயல்களையும் செய்வதற்கு உதவி புரிவார்.

ஒரு கட்டத்தில் பிரபு இறந்தவுடன், சரண்யாவும் பைத்தியமாகி விடுவார். அதாவது இங்கு குடும்பத்திலோ அல்லது காதலிலோ இருவருக்கும் மனநலம் சார்ந்த பிரச்னைகள் இருக்க கூடிய வாய்ப்பு அமையும் போது, அதனால் ஏற்படும் பாதிப்புகளையோ, விளைவுகளையோ எளிதாக யாராலும் புரிய வைக்க முடியாது.. அப்போது இருவருமே ஒருவருக்கு ஒருவர் சிந்தனையில் ஏற்படும் விபரீதமான விஷயங்களின் தீவிரம் பற்றி தெரியாமல், இருவரும் சேர்ந்து கஷ்டப்படுவார்கள். அதனால் இங்கு இருவரையும் தனித்தனியாக வைத்து கண்டிப்பாக சிகிச்சை கொடுக்க வேண்டிய அவசியம் தேவைப்படுகிறது. இதற்காக தான், உளவியல் சார்ந்த விழிப்புணர்வுகள் அதிகமாக தேவைப்படுகிறது என்கிறோம்.

தூண்டப்படும் மனபாதிப்பு (Induced Psychosis):

தற்போது Inspector Rishi என்ற வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் வெளியானது. அதில் ஒரு சீன் வரும். அந்தக் காட்டில் வாழும் பழங்குடியினரை வெளியேற அரசாங்கம் வற்புறுத்துகிறது. அதனால் அந்த பழங்குடியின மக்கள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து தீக்குள் குதித்து இறந்து போவார்கள். அவர்களால் ஊரோடு ஒத்து வாழ முடியாது என்பார்கள். உண்மையாகவே, இன்றைக்கு நம் ஒட்டு மொத்த உலகத்தில் இருந்து, அதாவது தற்போது அந்தமான் தீவிலுள்ள வடக்கு சென்டினல் தீவு ஒட்டு மொத்த உலக மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஊருக்குள் புதிதாக யார் சென்றாலும், அந்த பழங்குடியின மக்கள் அம்பு எய்து கொன்று விடுகிறார்கள்.

அதனால் அந்தப் பகுதி மட்டும் தற்போது விலக்கி வைக்கப்பட்டு, தொற்று நோய்களாலும், வன்முறையாலும் அம்மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறார்கள். இதைத் தான் Imposed Psychosis என்பார்கள். ஒரு சில மூட நம்பிக்கைகளால் குடும்பத்துக்காகவோ அல்லது ஊருக்காகவோ அவர்களால், யாரோடும் பழக முடியாத படி, விலகி இருப்பார்கள். அதனால் ஏற்படும் உடல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கான சிகிச்சைகளையும் வழங்க முடியாத தூரத்தில் இருப்பார்கள். அதுதான் இன்னும் கொடுமையாக இருக்கும்.

இவை எல்லாமே ஒரு நபருக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றவர்களை எந்த அளவிற்கு மனதளவில் பாதிக்கிறது என்பது தெரியாமல், ஒரு சங்கிலி போல், அடுத்தடுத்து மனப்பாதிப்புகளை இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களை வலை போல் சிக்க வைத்து விடும். இம்மாதிரி நேரங்களில் வெளியே இருந்து மிக யதார்த்தமாக நாம் கருத்துக்களை தத்துவமாக வாரி வழங்க முடியும்.
ஏனென்றால் இங்கு யோசிக்கும் திறன் என்றாலே, படிக்கும் கல்வியறிவை மட்டுமே பார்க்கிறார்கள்.

உளவியலில் சிந்தனையைக் கையாளுதல் (Intelligence Quotient), உணர்வைக் கையாளுதல் (Emotional Quotient), சமூகத்தை கையாளுதல் (Social Quotient) இந்த மூன்றிலும் ஒவ்வொரு தனி நபரின் ஆளுமை என்ன மாதிரி இருக்கிறது என்பதைப் பார்ப்போம். இதில் சில நேரங்களில், ஒரு சிலர் சிந்திக்கும் திறன் குறைவாக இருக்கும் போது பிடித்தவர்களின் வார்த்தைக்கு அடிமையாக இருப்பார்கள். ஒரு சிலரோ உணர்ச்சிப் பூர்வமாக இருக்கும் போது, சென்டிமென்டலாக எல்லாவற்றையும் அணுக ஆரம்பிப்பார்கள். சமூகத்தில் அல்லது ஒரு குழுவில் மிகவும் ஈடுபாட்டுடன் இருக்கும் போது, அந்தக் குழுவிற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதனால்தான், இந்த மூன்றிலும் ஒவ்வொரு தனி நபரும் என்ன மாதிரியான விஷயங்களை நமக்கு தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

அதனால் முதலில் கவிஞர் நரன் அவர்கள் எழுதிய வரிகளைப் போல், ஆத்மார்த்தமாக எல்லாக் கைகளும் சில நேரங்களில் அமையாது. நம்முடன், நாம் நேசிக்கும், சிந்தனையில் பிரச்னை உள்ள கைகளைப் பிடிக்கும் போது, அந்தக் கைகள், பிடித்திருக்கும் மற்ற கைகளையும் வாழும் நரகத்திற்கு அழைத்துச் சென்று விடும். அதனால் விபரீதமாக அல்லது உறவுகளுக்குள் உங்களைப் பாதிக்கின்ற விஷயங்கள் நடக்கும் போது, முறையான மனநல சிகிச்சையை எடுத்துக் கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கப் பழகுங்கள். l

The post மனவெளிப் பயணம் appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Gayatri Mahathi ,Poet Naran ,Dinakaran ,
× RELATED பத்தென்றாலும் அது தரமா இருக்கணும்!