நாகை: காரைக்காலில் இருந்து கேரளா சென்ற ஆம்னி பேருந்தில் ஏசி பழுதால் மூச்சு திணறலால் அவதிப்பட்ட 57 பயணிகள் கூச்சலிட்டனர். இதனால் நாகை அருகே நள்ளிரவு நடுரோட்டில் பஸ் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்காலில் இருந்து கேரளாவுக்கு ஆம்னி சொகுசு பேருந்து நேற்று சென்றது. இந்த பேருந்தில் கேரளா, கர்நாடகாவை சேர்ந்த 57 பேர் பயணம் செய்தனர். பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லையென டிரைவர், கண்டக்டரிடம் பயணிகள் கூறினர். இதை இருவரும் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கானூர் அருகே நேற்றிரவு 10 மணிக்கு வந்தபோது, பயணிகள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு கூச்சலிட்டனர். இதனால் பேருந்து நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பயணிகள் கீழே இறங்கி டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பேருந்தின் உரிமையாளர், காரைக்கால் அலுவலக மேலாளரை பயணிகள் தொடர்பு கொண்டனர். அதற்கு ஏசி சரி செய்வதற்கு ஆட்கள் வருகிறார்கள் என்று மேலாளர் கூறினார். ஆனால் இன்று அதிகாலை 2 மணி வரை யாரும் வரவில்லை. இதையடுத்து அந்த வழியாக சென்ற ரோந்து போலீசாரும் விசாரித்து பேருந்து உரிமையாளரை தொடர்பு கொண்டனர். அதற்கு ஏசி சரி செய்ய யாரும் கிடைக்கவில்லை. எதிர்திசையில் ஒரு பேருந்து வருகிறது. அந்த பேருந்தில் பயணிகளை ஏற்றி செல்கிறோம் என்று மேலாளர் கூறினார். ஆனால் அந்த பேருந்தும் வரவில்லை.
இதனால் வேறு வழியின்றி பயணிகள் ஏற்கனவே வந்த பேருந்தில் உள்ள கண்ணாடிகளை திறந்து விட்டனர். இதையடுத்து இன்று அதிகாலை 3 மணியளவில் அந்த பேருந்திலேயே பயணிகள் கேரளாவுக்கு புறப்பட்டு சென்றனர். பேருந்தில் ஏசி வேலை செய்யாததால் நடுரோட்டில் 5 மணி நேரம் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
The post காரைக்காலில் இருந்து கேரளா சென்ற ஆம்னி பஸ்சில் ஏசி பழுது; மூச்சு திணறலால் 57 பேர் அவதி appeared first on Dinakaran.