தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆறு தற்போது நீர் வரத்தின்றி பாறைகளாக காட்சியளிக்கிறது. ஒகேனக்கலுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கோடைகாலம் என்பதால் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள், ஒகேனக்கலுக்கு வந்து, நீர்வீழ்ச்சிகளில் குளித்தும், காவிரி அழகை ரசித்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும், மீன் சமையலை ருசித்து உண்டும் செல்வது வழக்கம். காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும், கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது வினாடிக்கு 200 கனஅடி நீர் மட்டுமே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மலைப்பகுதிகளில் பெய்யும் மழையை தொடர்ந்து வருகிறது.
அந்த நீரும் குடிநீருக்கு கூட போதுமானதாக இல்லை. இந்நிலையில், வரலாறு காணாத வெயில் வாட்டி வதைத்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்று பகுதியில் நீர் வரத்தின்றி பாறைகளாக காட்சியளிக்கிறது. பறந்து விரிந்த காவிரி ஆறு இன்று வறண்ட காவிரியாக நிற்கிறது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீரால் சூழப்பட்டிருந்த ஒகேனக்கல், இன்று தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கிறது. கடல் போல் காட்சியளித்த ஒகேனக்கல், இன்று வறண்ட பாலைவனம் போல் மாறி, இதை நம்பியுள்ள சுற்றுலா பயணிகளையும், வியாபாரிகளையும் பெரிய அளவில் பாதித்துள்ளது. ஆற்றில் நீர் நிரம்பியிருந்த காலம் மறைந்து, தற்போது பாறைகள் மட்டுமே காட்சியளிக்கிறது.
The post வரலாறு காணாத வெயில்!: நீர்வரத்தின்றி பாறைகளாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் காவிரி ஆறு..!! appeared first on Dinakaran.