×

ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி வழக்கு; திருவள்ளூர் கிளை இயக்குனர் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆருத்ரா கோல்ட் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனர் சசிகுமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆருத்ரா கோல்ட் நிறுவனத்துக்கு எதிரான, 2,438 கோடி ரூபாய் மோசடி வழக்கில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 23 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், 25வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனர் சசிகுமார் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிசிஐடி குற்றம்சாட்டுவது போல் மனுதாரர் திருவள்ளூர் கிளை இயக்குனர் இல்லை எனவும் அலுவலக ஊழியராக மட்டுமே தான் பணியாற்றினார். மனுதாரரிடம் விசாரணை நடத்தப்பட்டு விட்ட நிலையில், 200 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதை கருதி ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிட்டார்.

சிபிசிஐடி சார்பில், மாநில கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் ஆஜராகி, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ராஜசேகர் இன்னும் துபாயில் உள்ளார். அவரை இந்தியா அழைத்து வந்து விசாரணை நடத்த வேண்டியுள்ளது. மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். சிபிசிஐடி தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சசிகுமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி வழக்கு; திருவள்ளூர் கிளை இயக்குனர் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Arudra ,Tiruvallur ,Madras High Court ,Chennai ,Sasikumar ,Arudra Gold Company ,Economic Offenses Division ,Thiruvallur ,Dinakaran ,
× RELATED சண்டக்கோழி-2 படத்திற்கான வெளியீட்டு...