விருதுநகர், ஏப்.29: விருதுநகரில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதால் அப்பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார். விருதுநகர் தொகுதியில் கடந்த 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்.19ல் முடிவுற்றது. வாக்குப் பெட்டிகள் அனைத்தும் விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அங்கு மத்திய ஆயுதப்படை மற்றும் தமிழக சிறப்பு காவல் படையினருடன் கூடிய மூன்றடுக்கு பாதுகாப்பு சுழற்சி முறையில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் ஜூன் 4ம் தேதி வரை வாக்கு எண்ணும் மையமானது சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post வாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன் பறக்க தடை: மாவட்ட எஸ்பி தகவல் appeared first on Dinakaran.