காளையார்கோவில், ஏப்.29: காளையார்கோவிலில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக பதிக்கப்பட்ட காவிரி குடிநீர் பைப்புகள் அடிக்கடி உடைந்து விடுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. காளையார்கோவில் பகுதியில் உள்ள மதுரை-தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி கூட்டுக்குடிநீர் பைப்புகள் பதித்து சிவகங்கை நகராட்சி மற்றும் சுற்று வட்டார கிராமப்புர பகுதிகளுக்கு செல்கின்றது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சோமசுந்தர நகர் விலக்கில் உடைப்பு ஏற்பட்டு காவிரி குடிநீர் வீணாகி வருகின்றது. இதனை இன்று வரை சரி செய்யவில்லை. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி நின்று பொது மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. காவிரி குடிநீர் பைப்புகளில் ஏற்படும் பழுதுகளால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் சில மாதங்களுக்கு முன் புதிதாக போடப்பட்ட சாலையை தோண்டி பழுதாக்கி விடுகின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பொதுமக்கள் அவதி அடைந்து வரும் வேளையில் இது போன்று தண்ணீர் வீணடிக்கப்படுவது பொது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றது. இதுபோன்ற குடிநீர் உடைப்புகளை உடனே சரி செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொது மக்கள் கூறுகின்றனர்.
The post காளையார்கோவில் பகுதியில் காவிரி குடிநீர் குழாய்களில் அடிக்கடி ஏற்படும் உடைப்பு appeared first on Dinakaran.