பரமத்திவேலூர், ஏப்.29: பரமத்திவேலூர் வார சந்தையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நடத்திய திடீர் சோதனையில், கார்பைடு கல் வைத்தும், ரசாயன கலவை தெளித்தும் பழுக்க வைத்த மாம்பழங்களை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டி அழித்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மாம்பழ வியாபாரிகள் பழங்களை பழுக்க வைக்க கார்பைடு கல் வைத்தும், ரசாயன கலவை தெளித்து பழுக்க வைத்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இந்நிலையில், பரமத்திவேலூரில் ஞாயிற்றுகிழமை தோறும் நடக்கும் வாரச்சந்தையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில், அதிகாரி முத்துசாமி சந்தையில் ஒவ்வொரு மாம்பழக்கடைகளாக சோதனை நடத்தியதில், கார்பைடு கல் மற்றும் ரசாயனக் கலவை தெளித்து பழுக்க வைத்திருந்த நூறு கிலோவுக்கும் அதிகமான மாம்பழங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர். இதுபோன்று மாம்பழங்கள், வாழைப்பழங்கள் ஆகியவற்றை ரசாயன கலவை மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் எனவும், தொடர்ந்து அவ்வாறு செய்தால், வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
The post கார்பைடு கல்லால் பழுக்க வைத்த 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.