சென்னை: சென்னை-திருப்பதி இடையே வந்தே மெட்ரோ ரயிலை இயக்க அடுத்த 2 மாதங்களில் சோதனை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், அதிகபட்சமாக 180 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில், ‘வந்தே பாரத்’ ரயில்கள் வடிவமைக்கப்பட்டாலும் அதன் அதிகபட்ச வேகம் 130 கி.மீட்டராக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2019 பிப்ரவரியில் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது.
தற்போது 25 வழித்தடங்களில் 50 ரயில்கள் இயங்குகின்றன. தற்போது பல வந்தே பாரத் ரயில்கள் 8 பெட்டிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டாலும், அதிலும் பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது. பெரிய நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் ரயில்களை போன்று, தற்போது 200 கி.மீ தூர இடைவெளியில் உள்ள நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ஆண்டு வந்தே மெட்ரோ’ ரயிலை இயக்க இந்திய ரயில்வே வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இவை அறிமுகப்படுத்தப்பட்டால் பயண நேரம் வெகுவாக குறையும். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: இந்தாண்டு இறுதிக்குள் வந்தே மெட்ரோ ரயிலை கொண்டு வர முயல்கிறோம். இன்னும் ஓரிரு மாதங்களில் இதன் சோதனை தொடங்கும். தானியங்கி கதவுகள் தொடங்கி இதில் பல அட்டகாசமான வசதிகள் இருக்கும். தற்போது நகருக்குள் ஓடும் மெட்ரோ வசதிகளைக் காட்டிலும் இதில் கூடுதலாக வசதிகள் இருக்கும். வந்தே மெட்ரோ படங்களை விரைவில் வெளியிட உள்ளோம்.
இந்த வந்தே மெட்ரோ ஒரு தனித்துவமான கோச் கட்டமைப்பைக் கொண்டிருக்கும். ஒரு வந்தே மெட்ரோவில் மொத்தம் 3 யூனிட்கள் இருக்கும். ஒரு யூனிட் என்பது 4 பெட்டிகளைக் கொண்டதாகும். அதாவது ஒரு வந்தே மெட்ரோ என்பது குறைந்தபட்சம் 12 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும். தொடக்கத்தில் அனைத்து ரூட்களிலும் 12 பெட்டிகளைக் கொண்ட வந்தே மெட்ரோ இயக்கப்படும். தேவைப்பட்டால் 16 பெட்டிகளாக அதிகரிக்கலாம் .
முதலில் எந்த ரூட்டில் வந்தே மெட்ரோ வரும் என்பதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை, இருப்பினும், டெல்லி ரேவாரி ரூட்டில் முதல் வந்தே மெட்ரோ இயக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இவை தவிர லக்னோ- கான்பூர், அக்ரா- மதுரா, புவனேஷ்வர்- பாலசோர், திருப்பதி- சென்னை ஆகிய ரூட்களிலும் வந்தே மெட்ரோவை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மெட்ரோவை போல இதற்குத் தனியாக தண்டவாளங்கள் அமைக்க தேவையில்லை.
ஏற்கனவே இருக்கும் தண்டவாளங்களிலேயே இந்த வந்தே மெட்ரோவை இயக்க முடியும். இதன் முக்கிய நோக்கமே புறநகர் பகுதிகளில் இருந்து மக்களை நகர்ப்புறத்திற்கு எடுத்து வருவது தான் என்பதால் இதில் முன்பதிவில்லாத பயணிகளே அதிகம் பயணிப்பார்கள். ஒவ்வொரு பெட்டியிலும் தீ மற்றும் புகையை கண்டறிவதற்கான சென்சார்கள் பொருத்தப்படும் என தெரிவித்தார்.
The post சென்னை-திருப்பதி இடையே வந்தே மெட்ரோ ரயில்: 2 மாதங்களில் சோதனை appeared first on Dinakaran.