- பெங்களூர்
- குஜராத் டைட்டன்ஸ்
- அகமதாபாத்
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
- ஐபிஎல் லீக்
- மோடி அரங்கம்
- பெங்களூரு
- சாஹா
- தின மலர்
அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசியது. சாஹா, கேப்டன் கில் இணைந்து குஜராத் இன்னிங்சை தொடங்கினர். சாஹா 6 ரன், கில் 16 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, டைட்டன்ஸ் 45 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், சாய் சுதர்சன் – ஷாருக் கான் ஜோடி அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.
ஷாருக் கான் 24 பந்திலும், சாய் சுதர்சன் 34 பந்திலும் அரை சதம் அடித்து அசத்தியதுடன் 3வது விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்தனர். ஷாருக் கான் 58 ரன் (30 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி சிராஜ் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். கடைசி கட்டத்தில், சாய் சுதர்சன் – டேவிட் மில்லர் இணை அதிரடியாக 69 ரன் சேர்க்க… குஜராத் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன் குவித்தது.
சாய் சுதர்சன் 84 ரன் (49 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), மில்லர் 26 ரன்னுடன் (19 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூரு பந்துவீச்சில் ஸ்வப்னில் சிங், முகமது சிராஜ், கிளென் மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 201 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது.
விராத் கோஹ்லி, கேப்டன் டு பிளெஸ்ஸி இணைந்து துரத்தலை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 3.5 ஓவரில் 40 ரன் சேர்த்தது. டு பிளெஸ்ஸி 24 ரன் (12 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சாய் கிஷோர் பந்துவீச்சில் மாற்று வீரர் விஜய் ஷங்கர் வசம் பிடிபட்டார். அடுத்து விராத் கோஹ்லி – வில் ஜாக்ஸ் ஜோடி அதிரடியில் இறங்க, ஆர்சிபி ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இவர்களைப் பிரிக்க குஜராத் பவுலர்கள் மேற்கொண்ட முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை.
கோஹ்லி 32 பந்திலும், ஜாக்ஸ் 31 பந்திலும் அரை சதம் அடித்தனர். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் ஆர்சிபி 16 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கோஹ்லி 70 ரன் (44 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), ஜாக்ஸ் 100 ரன்னுடன் (41 பந்து, 5 பவுண்டரி, 10 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜாக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 10 போட்டியில் 3வது வெற்றியை பெற்ற பெங்களூரு அணி 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் நீடிக்கிறது. குஜராத் (8 புள்ளி) 7வது இடத்தில் உள்ளது.
The post 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி: குஜராத் டைட்டன்ஸ் ஏமாற்றம் appeared first on Dinakaran.