×
Saravana Stores

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு நடத்தும் இலவச நீட் பயிற்சி வகுப்பு: 128 மையங்களில் தீவிர பயிற்சி

சென்னை: அரசுப்பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு நடத்தி வரும் இலவச பயிற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் 128 மையங்களில் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு வருகிற 5ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. நீட் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் தேர்வுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளை தயார்ப்படுத்துவதற்கு ஏதுவாக இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது.

அந்த வகையில் நடப்பாண்டும் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் முதல் தொடங்கி நடந்து வந்தன. பின்னர் பொதுத் தேர்வையொட்டி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படாமல் இருந்தன. பொதுத் தேர்வு நிறைவு பெற்றதை தொடர்ந்து மீண்டும் பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த ஆண்டு நீட் தேர்வை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகள் 10 ஆயிரத்து 832 பேர் எழுத இருக்கின்றனர்.

இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் 128 மையங்களில் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. இதில் அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 10 மையங்களில் 929 மாணவ-மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர். தினமும் காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிற்சி வகுப்புகளை ஆசிரியர்கள் நடத்துகின்றனர். மாணவ-மாணவிகளுக்கு சிற்றுண்டி,தேநீரும் வழங்கப்படுகிறது.

இதுதவிர பயிற்சிக்கு தேவையான கூடுதல் குறிப்புகளை தயாரித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்குகின்றனர். இயற்பியல், வேதியியலில் வினாக்கள் கடினமாக இருப்பதால், உயிரியியல் பாடங்களுக்கு கூடுதல் கவனம் மாணவ-மாணவிகளுக்கு செலுத்தி வருகிறார்கள். இதற்காக மாலையில் கூடுதல் நேரமும் எடுத்து ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கின்றனர்.

The post அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு நடத்தும் இலவச நீட் பயிற்சி வகுப்பு: 128 மையங்களில் தீவிர பயிற்சி appeared first on Dinakaran.

Tags : OF ,TAMIL NADU ,Chennai ,Government of Tamil Nadu ,M. B. B. S. ,P. D. S. ,
× RELATED இளைஞர்களை கவரும் வகையில் புதிய சேவை.....