×

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; ஜூன் மாதம் இறுதி வரை ஓஆர்எஸ் கரைசல் விநியோகம்: பொது சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் தமிழகத்தில் 1000 இடங்களில் ஜூன் மாதம் இறுதி வரை ஓஆர்எஸ் கரைசல் விநியோகம் செய்ய பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்தாண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் அடிக்கடி வெப்ப அலையும் வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கு ஏற்பவே வெயிலின் உக்கிரமும் தினமும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வரும் நாட்களில் தமிழக உள் மாவட்டங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் வாய்ப்புள்ளது. வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் தமிழகத்தில் 1000 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் என்று கூறப்படும் உப்பு – சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகளை விநியோகிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

உலக வானிலை அமைப்பு வெப்ப அலையை வரையறை செய்துள்ளது. அதன்படி, வெப்ப அலை என்பது சாதாரண வெப்பநிலையிலிருந்து 4.5 டிகிரி செல்சியஸ் முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். காலநிலை மாற்றம் காரணமாக, வெயிலின் தாக்கம் உலகளவிலும் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தினாலும், வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களும் மக்களை அதிகளவில் பாதிக்கின்றன. மேலும், பல்வேறு வெப்பம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துவதுடன், உடலியல் மன அழுத்தம், சில நேரங்களில் மரணத்தையும் ஏற்படுத்துகிறது.

வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் வெப்பம் தொடர்பான நோய்களை எதிர்கொண்டு சிகிச்சை அளிக்க ஓஆர்எஸ் பவுடர் வழங்குவதற்கு அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், பொதுமக்களுக்கு நோய்த்தொற்று மற்றும் நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், ஓஆர்எஸ் (ORS) பவுடர்கள் வழங்கப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். வெப்பநிலை மாற்றத்தின் காரணமாக ஜூன் 30ம் தேதி வரையில் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; ஜூன் மாதம் இறுதி வரை ஓஆர்எஸ் கரைசல் விநியோகம்: பொது சுகாதாரத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,ORS ,Public Health Department ,Chennai ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில்...