புதுடெல்லி: கர்நாடகா பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்காத எம்பிக்களை அனுப்பி ஏன் மாநில மக்களை பிரதமர் மோடி பழிவாங்குகிறார்’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். பிரதமர் மோடி கர்நாடகாவில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
இரண்டாம் கட்ட தேர்தலிலும் தோற்ற பிறகு, அவநம்பிக்கையுடன் இருக்கும் பிரதமர் மோடி கர்நாடகாவில் பிரசாரம் செய்கிறார். இதில் பொய் மற்றும் பயத்தை தூண்டுவதற்கு பதிலாக சில கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும். அவை: பாஜ எம்பிக்கள் மிக மோசமான மக்கள் பிரதிநிதிகளாக செயல்படுவது ஏன்? கர்நாடகா வறட்சி நிதியை 7 மாத தாமதத்திற்கு பிறகும் வெறும் 20 சதவீதம் மட்டும் ஒன்றிய அரசு தந்திருப்பது ஏன்? மேல் பத்ரா, மகதாயி திட்டங்களை ஒன்றிய அரசு கிடப்பில் போட்டிருப்பது ஏன்?
நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவை (பிஆர்எஸ்) சமீபத்திய தரவுகளின்படி, கர்நாடகாவைச் சேர்ந்த பாஜ எம்பிக்கள் தங்கள் பொறுப்புகளை அப்பட்டமாக புறக்கணித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் எம்பிக்களின் தேசிய சராசரி வருகை 79 சதவீதமாக உள்ள நிலையில், 28 கர்நாடகா எம்பிக்களின் சராசரி வருகை 71 சதவீதம் மட்டுமே. இதில் 26 எம்பிக்கள் கர்நாடகாவின் பிரச்னைகளான 100 நாள் வேலைக்கான நிதி வழங்கல், வறட்சி மற்றும் வெள்ள நிவாரண நிதி, ரேஷனில் கூடுதல் அரிசி ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்றத்தில் கேட்டதில்லை. 5 ஆண்டுகளில் 3 எம்பிக்கள் ஒரு கேள்வி கூட கேட்டதில்லை. 5 எம்பிக்கள் ஒரு விவாதத்தில் கூட பங்கேற்றதில்லை. 7 எம்பிக்கள் பாஜ, ஆர்எஸ்எஸ்சின் அரசியலமைப்புக்கு எதிரான கொள்கைகளில் மட்டுமே கவனம் செலுத்தி உள்ளனர்.
28 எம்பிக்களில் 14 பேர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவர்களின் தொகுதிகளில் வகுப்புவாதத்திற்கு காரணமாக இருந்துள்ளனர். இப்படிப்பட்ட கையாலாகாத எம்பிக்களை அனுப்பி வைத்ததற்காக மோடி கர்நாடகா மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா? அல்லது கையாலகாதவர்களை தேர்ந்தெடுக்கச் செய்வதுதான் மோடியின் திட்டமா? வறட்சி நிவாரண நிதியாக ஒன்றிய அரசிடம் ரூ.18,171 கோடி வேண்டுமென கர்நாடகா அரசு கடந்த செப்டம்பர் மாதம் கேட்டது. இது குறித்து முடிவெடுக்க வேண்டிய காலக்கெடு கடந்த டிசம்பருடன் முடிந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி ஒன்றிய நிதி அமைச்சர் சாக்குபோக்கு சொன்னார்.
இறுதியில் உச்ச நீதிமன்றம் கட்டாயப்படுத்திய பிறகு ஒன்றிய அரசு ரூ.3,498 கோடியை விடுவித்துள்ளது. இது கர்நாடகா அரசு கேட்டதில் வெறும் 20 சதவீதத்துக்கும் குறைவு. கர்நாடக மக்கள் மீது பிரதமர் மோடி ஏன் அலட்சியமாக இருக்கிறார்? இதே போல, கடுமையான வறட்சியில் தத்தளிக்கும் கர்நாடகாவில் குடிநீர் மற்றும் பாசன வசதியை விரிவுபடுத்துவதற்கான மேல் பத்ரா, மகதாயி திட்டங்கள் முக்கியமானவை. இந்த அத்தியாவசிய திட்டங்களை மோடி அரசு ஏன் புறக்கணித்தது? கர்நாடகா மக்களை பிரதமர் மோடி ஏன் பழிவாங்குகிறார். இந்த விவகாரங்களில் மோடி மவுனத்தை கலைக்க வேண்டும். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார்.
The post லாயக்கில்லாத எம்பிக்களை அனுப்பி மக்களை ஏன் மோடி பழி வாங்குகிறார்?: காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.