×
Saravana Stores

அரசு பள்ளியிலேயே மாணவர்களுக்கு சீருடையை தைத்து வழங்க முடிவு அதிகாரிகள் தகவல்

வேலூர், ஏப்.28:
அரசு பள்ளியிலேயே மாணவர்களுக்கான சீருடையை தைத்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு மாதிரி பள்ளிகளுக்கான உறுப்பினர் செயலர் சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழுக்கூட்டம்(எஸ்எம்சி) 2022ம் ஆண்டு செப்டம்பர் முதல் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பெற்றோர் செயலியில் உள்ளீடு செய்யும் நடைமுறை அமலில் இருக்கிறது. 1,369 தீர்மானங்கள் மாணவர்களின் சீருடை அளவு சார்ந்தவைகளாக உள்ளன. எனவே, ஒரு முன்மாதிரி முயற்சியாக குறிப்பிட்ட 50 பள்ளிகளில் மாணவர்களுக்கு சரியான அளவில் சீருடை தைத்து வழங்குவதை எஸ்எம்சி குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட 50 பள்ளிகளிலும் மாணவர்களுக்கான சீருடைகள் தைத்தலை சார்ந்த பள்ளிகளே மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அந்த சீருடைகளை தைப்பதற்கு சுய உதவிக்குழு அல்லது உள்ளூரில் உள்ள தகுதிவாய்ந்த ஒரு தையல் கலைஞரை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் உதவியுடன் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 4ம் வகுப்பு மாணவர்களுக்கும், நடுநிலை பள்ளிகளில் 1 முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கும் அளவுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் எஸ்எம்சி மூலமாக பள்ளி மாணவர்களுக்கு அளவெடுத்து தைப்பதற்கு தேவையான துணியின் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் சேகரித்து அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அரசு பள்ளியிலேயே மாணவர்களுக்கு சீருடையை தைத்து வழங்க முடிவு அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Tamil Nadu Model Schools ,Member Secretary ,Suthan ,Tamil Nadu ,
× RELATED காட்பாடி அருகே பயணிகள் ரயிலின்...