- கல்லாங்குறிச்சி கலியுக வரதராஜப்பெருமாள் கோவில்
- அரியலூர்
- கல்லாங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோவில்
- திருப்பதி
- கலியுக வரதராஜப் பெருமாள்
- ஏகாந்த சேவா
அரியலூர், ஏப்.28: அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த கோயிலில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட விளைச்சல் நல்ல மகசூல் கிடைக்கவும், தங்களது விவசாயத்திற்கு உறுதுணையாக உள்ள ஆடு, மாடுகள் பூரண நலத்துடன் விளங்கவும் வேண்டிக் கொண்டு, ஆண்டு திருவிழாவின் போது தங்களது வயலில் விளைந்த தானியங்களையும், ஆடு, மாடுகளையும் காணிக்கையை செலுத்துவது வழக்கம். இதனால் இக்கோயில் ஏழைகளின் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. திருச்சி, தஞ்சாவூர், நாகை, சேலம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் மக்களின் குலதெய்வ தலமாக இக்கோயில் விளங்குகிறது. இச்சிறப்பு பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோயில் ஆண்டு பெருந்திருவிழா கடந்த 17ம் தேதி ராமநவமி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஐந்தாம் நாள் திருவிழாவான வெள்ளி கருட சேவையை தொடர்ந்து, ஏழாம் நாள் திருவிழாவான திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவின் இறுதி நிகழ்ச்சியான ஏகாந்த சேவை நேற்று முன்தினம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் தசாவதார மண்டபத்தில் எழுந்தருளினார். திருக்கல்யாணம் முடிந்து தேரோட்டம் நடைபெற்று மிகவும் சந்தோஷமான நிலையில் வரதராஜ பெருமாள் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு நேற்று காட்சியளிப்பதாக ஐதீகம். நேற்று பக்தர்கள் வரதராஜ பெருமாளை தரிசித்தால், வேண்டுவோருக்கு வேண்டுமென வரதராஜ பெருமாள் வரம் தருவார் என்பது ஐதீகம். அவர் சந்தோஷமான நிலையில் அதாவது ஏகாந்தமாக இருப்பதால் இது ஏகாந்த சேவை என்று அழைக்கப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள், வரதராஜ பெருமாளை கண்டு தரிசனம் செய்தனர்.
வானம் வண்ணக்கோலம் பூண்டது போல் விண்ணதிர வானவேடிக்கை நடைபெற்றது பொதுமக்கள் கண்டு களித்தனர். கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான முறம் உலக்கை உள்ளிட்ட உலோகப் பொருட்களை அதிகளவில் வாங்கிச் சென்றனர். இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர், கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சல், ராட்டினம், ரயில், குதிரை வாகனம் உள்ளிட்டவைகளில் பயணித்து மகிழ்ச்சி அடைந்தனர். திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், கும்பகோணம், சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post கல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாள் கோயிலில் ஏகாந்த சேவை; திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.