- சேலம்
- ஆசிரியர் தேர்வு வாரியம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு உயர் கல்வித் திணைக்களத்தின் கல்லூரி கல்வி
- தின மலர்
சேலம்: தமிழகத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க, வரும் 15ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ், 150க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் 7,500க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவை நிரப்பப்படாமல் இருந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு, 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஆனால், நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தேர்வுப் பணியை முடிக்க இயலவில்லை.
இதனிடையே, தற்போது இக்கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள், போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை, கடந்த மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. தொடர்ந்து, மார்ச் 28 முதல் ஏப். 29வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 4ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்படவுள்ளது. ஏற்கனவே கடந்த 2019 உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்களின் விண்ணப்பம் இந்த தேர்வுக்கும் பரிசீலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தேர்வுக்காக காத்திருந்த பட்டதாரிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வந்தனர்.
இதனிடையே, ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால், கூடுதல் கால அவகாசம் வழங்க கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து மே 15 வரை அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி, வரும் 29ம் தேதியிலிருந்து, மே 15ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது,’ என்று அறிவித்துள்ளது.
The post அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்: வரும் 15ம் தேதி வரை நீட்டித்து டிஆர்பி அறிவிப்பு appeared first on Dinakaran.