*வாகனஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம்
போடி : போடி அருகே ராசிங்காபுரத்தில் புதிய கழிவுநீர் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட மண் சாலையோரம் மலைபோல் குவித்து வைத்திருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோரும் விலகி செல்ல முடியாமல் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இந்த மண் குவியலை அகற்றி கழிவுநீர் கால்வாய் பணியை துவங்கி விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
போடி அருகேயுள்ளது ராசிங்காபுரம் கிராம ஊராட்சி. இங்கு 8000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தேவாரம் சாலையில் அமைந்துள்ள ராசிங்காபுரம் பகுதியில் வாகன போக்குவரத்து அதிகமானதால் மாநில நெடுஞ்சாலை துறையும், ஊராட்சி நிர்வாகமும் இணைந்து சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தது. இதில் முதற்கட்டமாக சாலையின் இருபுறங்களிலும் குறுகிய கழிவுநீர் கால்வாய்கள் அகற்றப்பட்டு உயர்ந்த மற்றும் ஆழமான கழிவுநீர் கால்வாய்கள் கட்டும் பணிகளை துவங்க முடிவு செய்தனர்.
இதற்கு முன்னதாக கழிவுநீர் கால்வாய்க்கு மேல் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் பழைய கழிவுநீர் கால்வாய்கள் அகலமாகவும், ஆழமாக தோண்டப்பட்டன. பின்னர் புதிய கழிவுநீர் கால்வாய்களுக்கு உயரமான வாறுகால்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ராசிங்காபுரம் நுழைவு பகுதியான கரியப்பகவுண்டன்பட்டி அருகே சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் புதிய கழிவுநீர் கால்வாய்களுக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட மண் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் பணிகள் ஏதும் செய்யாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் இப்பகுதி மக்கள் அவ்வழியே நடந்து செல்ல முடியாமல் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதுதவிர,
இச்சாலையில் செல்லும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று வேகமாக கடக்கும் போது இந்த மண் குவியலால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும் கழிவுநீர் கால்வாயில் இருந்த தோண்டிய மண் என்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியில் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் நலன் கருதி மாநில நெடுஞ்சாலை துறையும், ஊராட்சி நிர்வாகமும் இந்த மண் குவியலை அகற்றுவதுடன் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய்கள் கட்டும் பணியை துவங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post போடி ராசிங்காபுரத்தில் மலைபோல் மண் குவிப்பால் மக்கள் சிரமம் appeared first on Dinakaran.