*வேலூர் கோட்டை வடிவில் முகப்பு தோற்றம்
வேலூர் : காட்பாடியில் ரூ.365 கோடி நிதியில் ரயில் நிலையத்தை சர்வதேச தரத்தில் மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வேலூர் கோட்டை வடிவில் புதிய முகப்பு தோற்றம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டது. முதற்கட்டமாக 50 ரயில் நிலையங்கள் சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தில் காட்பாடி, சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்கள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.2 ஆயிரம் கோடியில் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
அவ்வாறு மேம்படுத்தப்பட உள்ள ரயில் நிலையங்களில் ஒன்றாக காட்பாடி ரயில் நிலையமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. காட்பாடி ரயில் நிலையத்தின் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் காணொலி காட்சி மூலம் நாட்டினார். இதையடுத்து ஒவ்வொரு பிரிவுகளாக மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.
இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போது ரயில் நிலையத்தின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியை மேம்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதுள்ள ரயில் நிலையக் கட்டிடம் 2 கட்டங்களாக இடிக்கப்பட்டு அனைத்தும் புதிய கட்டடத்திற்கு மாற்றப்படும். தெற்குப் பக்கத்தில் ரயில் நிலையத்திற்கு வரும் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளை பிரிப்பதற்காக ஒரு தனி வருகை முனையமும், புறப்பாடு முனையமும் கட்டப்படும். வடக்குப் பகுதியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய முனையம் கட்டப்படும். அனைத்து கட்டடங்களும் காட்பாடி- வேலூர் கோட்டை நகரத்தின் தழுவலோடு, தொன்மை மாறாமல் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில், அதே நேரத்தில் புதிய தொழில்நுட்ப கட்டட கலையுடன் முகப்புத்தோற்றம் அமைய உள்ளது.
தெற்குப் பகுதியில் அமைய உள்ள புறப்பாடு முனையக் கட்டிடம் தாழ்தள பால்கனியோடு 4 மாடியுடன் 10,250 சதுர மீட்டரில் உலகத் தரத்தில் கட்டமைக்கப்படும். தரை தளத்தில் பயணிகள் புழக்கத்திற்கு இடவசதியும், புறப்பாடு பகுதி, உதவி மையம், ஏசி காத்திருப்பு அறை, முன்பதிவு பயணச் சீட்டு அலுவலகங்கள், எஸ்கலேட்டர், மின் தூக்கிகள், மற்றும் பால்கனி தளத்தில் ஓய்வறைகள் இருக்கும். முதல் தளத்தில் ஏசி மற்றும் ஏசி அல்லாத காத்திருப்பு அறை, பொருட்கள் வைப்பு அறை மற்றும் ரெயில்வே அலுவலகங்கள் அமைய உள்ளன.
புறப்படும் முனைய கட்டிடத்தின் 2வது தளத்தில் பெண்கள் காத்திருப்பு அறை, ஏசி அல்லாத காத்திருப்பு அறை, குழந்தை பராமரிப்பு மற்றும் வணிகப் பகுதி, மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் வணிக நிறுவனங்கள் அமைய உள்ளன. தெற்கு பகுதியில் அமைய உள்ள வருகை தாழ்தள பால்கனி வசதியுடன் 4 மாடியுடன் 10,250 சதுர மீட்டரில் அமைய உள்ளது. தாழ்தளத்தில் பயணிகளின் வசதிக்காக உதவி மையம், சுற்றுலா தகவல் மையம், பொருட்கள் வைப்பறை மற்றும் ரெயில்வே அலுவலகங்கள் அமைய உள்ளன.
இதன் முதல் தளத்தில் பல்வேறு ரயில்வே அலுவலகங்களும் மற்ற 3 தளங்களும் வணிக நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. புறப்பாடு மற்றும் வருகை முனையங்களை இணைப்பதற்காக இரு சுரங்கப்பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வருகை மற்றும் புறப்பாடு பயணிகளை பிரிப்பதற்காக 2 பொதுத்தளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இவை வருகை முனையத்திலிருந்து அனைத்து நடைமேடைகள் மற்றும் வடக்கு முனையத்தை இணைக்கும்.
இதே போலவே புறப்பாடு முனைய பொதுத்தளம் புறப்பாட்டு முனையத்தை அனைத்து நடைமேடைகள் மற்றும் வடக்கு முனைய கட்டடத்துடன் இணைக்கும். அனைத்து நடைமேடைகளிலும் போதுமான அளவு எஸ்கலேட்டர், மின் தூக்கி, படி வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டு பொது தளங்களும் பயணிகளுக்கான வசதிகளுடன் நடைமேடைகள் பயணிகளுக்கு எளிதில் புலப்படும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. தரை தளத்தில் 600 சதுர மீட்டரில் அமைய உள்ள வடக்கு முனையம் பயணச்சீட்டு மையம், புறப்பாட்டு பகுதி ஆகியவற்றுடன் அமைய உள்ளது.
வடக்கு முன்னயத்தின் முன் பகுதி 300 சதுர மீட்டரில் அமைய உள்ளது. வடக்கு முனையத்தில் இருந்து பயணிகள் வெளியேறும் பகுதியாக இது அமைய உள்ளது. இந்த பகுதியில் வாகனங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதற்கான வசதிகளும் அமைய உள்ளது. இந்த கார் பார்க்கிங் வசதி 6 மாடியுடன் 9,250 சதுர கிலோ மீட்டரில் பிரமாண்டமாக அமைய உள்ளது.
இதில் 258 கார்கள், 2,120 இருசக்கர வாகனங்களை நிறுத்திக் கொள்ள முடியும். ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு கார் பார்க்கிங் வருவதற்கு அகலமான சாலை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post காட்பாடியில் ₹365 கோடி நிதியில் ரயில் நிலையத்தை சர்வதேச தரத்தில் மேம்படுத்தும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.