×

மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்

 

கோவை மாவட்டத்தில் முறைப்படுத்தப்பட்ட குளங்கள், முறைப்படுத்தப்படாத குளங்கள் ஏராளமாக உள்ளன. தற்போது, கோடை வெயில் அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதேபோல குடிநீருக்கும் ஆங்காங்கே பற்றாக்குறை நிலவி வருகிறது. கோவையில் உள்ள பெரும்பாலான குளங்களும் வற்றிவிட்டன. குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. ஆழ்துளை கிணறுகள் அமைத்து, குடிநீர் அல்லாத தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. கோவைக்கு குடிநீர் வழங்கும் அணைகளிலும் தண்ணீர் மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு காரணம், நிலத்தடி நீரை அதிக அளவில் பயன்படுத்தியதால் அவற்றின் நீர்மட்டம் சரிந்துவிட்டது. கோவை மாவட்டத்தில் நொய்யல் நீர்வழித்தடத்தில், 24-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் முறைப்படுத்தப்படாத ஏரி, குளங்கள் என்கிற வகையில் 1,200க்கும் மேற்பட்ட சிறு குட்டைகள் உள்ளன.

இதில், நொய்யல் நீர்வழித்தடங்களில் உள்ள குளங்களில் மட்டுமே தற்போது 30 சதவீதம் அளவுக்கு தண்ணீர் உள்ளது. மீதமுள்ள நீர், நிலைகளில் கிட்டத்தட்ட 80 சதவீதம் தண்ணீர் வற்றிப்போய்விட்டன. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முற்றிலும் கைவிட்டுவிட்டது. இதனால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை. இதன் காரணமாக, நொய்யல் வழித்தடத்தில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்தும் இல்லாமல் போய்விட்டது. வடகிழக்கு பருவமழையும் போதிய அளவில் பெய்யவில்லை. இதன்மூலம், குளங்களுக்கு ஓரளவு மட்டுமே தண்ணீர் கிடைத்தது. இதன் காரணமாக, கோவை மாவட்டத்தில் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் 700 அடி முதல் 1,000 அடி வரை சரிந்துவிட்டது. உள்ளாட்சி அமைப்புகள் பலவற்றில் ஆழ்துளை கிணறு அமைத்தும், தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சி எடுத்துவிட்ட காரணத்தால் பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் புதிதாக அமைத்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை.

பேரூர் பெரியகுளம், செங்குளம், வெள்ளலூர் குளம், போன்ற குளங்களில் கிட்டத்தட்ட 20 சதவீதம் அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. கொளராம்பதி, புதுக்குளம், போன்ற குளங்கள் வற்றிப்போகும் சூழலில் உள்ளன. கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி, பில்லூர் அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக சரிந்து வருகிறது.இந்த நேரத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தினால் மட்டுமே எஞ்சியுள்ள கோடை காலத்தை சமாளிக்க முடியும். ஆழ்துளை கிணறு அமைத்து, ஒரு சுவிட்ச் பட்டனை அழுத்தினால் தண்ணீர் ஆயிரம் அடிக்கு கீழ் இருந்து மேலே வந்துவிடுகிறது. இவை, நம் முன்னோர் சேமித்து வைத்த தண்ணீர். அப்படி எடுக்கிற தண்ணீரை, நாம் மீண்டும் பூமிக்கு அடியில் முறையாக கொண்டுபோய் சேர்ப்பது இல்லை.முறையாக மழைநீர் கட்டமைப்பு அமைத்து, மழைநீரை சேகரித்தால், நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடியில் இருந்து படிப்படியாக மேலே உயர்ந்து, 400 அடி வரை உயரும். தொடர்ச்சியாக இதை செய்யும்பட்சத்தில் 300 அடி, 200 அடி வரைகூட உயரும். இளம்தலைமுறையினர் மற்றும் அடுத்த சந்ததியினர் நலன்கருதி, நிலத்தடி நீரை சேமிப்பது, நமது ஒவ்வொருவர் கடமை ஆகும்.

நம் வீட்டில், குழந்தைகளுக்காக நகை, பணம், பொருள் எப்படி சேமிக்கிறோமோ, அதேபோல், நிலத்தடி நீரையும் சேமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இளம்தலைமுறையினரின் எதிர்காலத்தை கருதி இப்பணியை ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் துவக்கவேண்டும். இது நமக்கு தேவையில்லாத விஷயம், அதை அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் என யாரும் ஒதுங்கிவிட முடியாது. தண்ணீர் பிரச்னையை தீர்க்க வேண்டுமென்றால் மழைநீரை சேமிக்க வேண்டும். அதற்கான கட்டமைப்புகளை வீடு மற்றும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும், கடை, வணிக வளாகம், தனியார் அலுவலகம், அரசு அலுவலகம், பள்ளி, கல்லூரி, கோவில் என ஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு உருவாக்க வேண்டும். இதை செய்யும்பட்சத்தில், மழைக்காலங்களில் தண்ணீர் சேமிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்த ஏதுவாக இருக்கும். பொதுவாக, மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை எவ்வளவு கிடைக்கிறது என்பதை பொறுத்துதான் அடுத்த வருடத்தில் நிலையை உறுதிசெய்ய முடியும்.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தினால் மட்டுமே இந்த கோடையை எளிதாக கடந்து செல்ல முடியும். பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் கோடை மழை பெய்து கொண்டிருந்தது, இந்த ஆண்டு அதுவும் பெய்யவில்லை. பவானிசாகர் அணையில் 15 டிஎம்சி தண்ணீர் எடுத்துச்செல்லும் சேமிப்பு இருந்தது, அது, இந்த ஆண்டு இரண்டு பருவ பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால், கோடை காலத்தில் மழை பெய்யாததால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்துள்ளது. பிஏபி கால்வாய் அமைப்பும், அமராவதி அணையும் ஆபத்தான நிலையில் உள்ளன. பாசனத்திற்காக பிஏபி கால்வாயில் தற்போது இரண்டு சுழற்சிகளுக்கு பதிலாக ஒற்றை நீர் சுழற்சி வழங்கப்படுகிறது. மழையை கணிக்க முடியாததால், குடிநீர் தேவைக்காக அனைத்து அணைகளிலும் தண்ணீர் தேக்க முடிவு செய்துள்ளோம்.

சுமார் 24 அணைகளின் ஷட்டர் மூடப்பட்டுவிட்டது. பவானிசாகர் அணைக்கான ஷட்டர்களும் மூடப்பட்டுவிட்டது. இதன்மூலம் மேற்கு மண்டலத்தில் உள்ள ஆழியார் அணை, திருமூர்த்தி அணை, அமராவதி அணை, பவானிசாகர் அணை, பாலாறு அணை (திண்டுக்கல் மாவட்டம் பழனி) மற்றும் பிற சிறிய அணைகளுடன் இணைக்கப்பட்ட மீதமுள்ள குடிநீர் திட்டங்களை செயல்படுத்த முடியும். கோவை மாவட்டத்திற்கான குடிநீர் பில்லூர் அணையில் இருந்து நேரடியாக எடுக்கப்படுகிறது. அதே வேளையில், திருப்பூர் மாவட்டத்திற்கான மற்ற குடிநீர் திட்டங்களுக்கு பவானி ஆற்றின் கீழ்பகுதியில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. அதனால், குடிநீர் தட்டுப்பாடு வராது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore district ,Coimbatore ,Dinakaran ,
× RELATED 1.5 கிராம் உயர்ரக போதை பொருள் பறிமுதல்