×

இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பேச்சு;மோடியை தகுதி நீக்கம் செய்து குற்ற வழக்கு பதிய வேண்டும்: தேர்தல் அலுவலரிடம் பல்வேறு அமைப்பினர் மனு


தஞ்சாவூர்: மக்கள் அதிகாரம் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் தேவா தலைமையில் மாநில பொருளாளர் காளியப்பன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமை நிர்வாகி அருண்சோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர துணை செயலாளர் மூர்த்தி, ஆட்டோ சங்கம் பாதுகாப்பு பேரவை ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் தஞ்சை வருவாய் கோட்டாட்சியரும், உதவி தேர்தல் அலுவலருமான இலக்கியாவிடம் நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது பேச்சு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் சட்டத்திற்கு கட்டுப்பட்டு விசுவாசமாக நடப்பதாக உறுதிமொழி எடுத்து பதவியேற்ற பிரதமர் மோடி இதுபோன்று அவதூறு கருத்துக்களையும், மதவெறியை தூண்டும் வகையிலும் பேசியது வண்மையாக கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடி மீது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தனி நபர்கள் பல்லாயிரக்கணக்கானோர் புகார் மனுக்களை அனுப்பி உள்ளனர். மோடியின் இந்த பேச்சு சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக உள்ளது. தேர்தலில் நிற்பதற்கு தகுதி நீக்கம் செய்ய வேண்டும். உரிய சட்டப்பிரிவு படி மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

மோடியை பிரதமர் பதிவிலிருந்து நீக்க குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மனுவானது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சென்று சேரும் வகையில் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும் என கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தலைவர் தமிழரசன் தலைமையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

‘தரங்கெட்டு செயல்படும் மோடியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’
மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா நேற்று கும்பகோணத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதல்கட்ட தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் தான் மோடியும், பாஜவின் தலைவர்களும் பாஜவினுடைய உத்தரவாதங்களை பற்றி பேசாமல் சமூகத்தை பிளவுபடுத்தக்கூடிய மிகவும் மோசமான, கீழ்த்தரமான, விஷமத்தனமான கருத்துக்களை பேசி வருகின்றனர். இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் யாருமே இது போன்ற தரங்கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதில்லை. மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசிய பிரதமர் மோடியை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவருடைய பரப்புரைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பேச்சு;மோடியை தகுதி நீக்கம் செய்து குற்ற வழக்கு பதிய வேண்டும்: தேர்தல் அலுவலரிடம் பல்வேறு அமைப்பினர் மனு appeared first on Dinakaran.

Tags : Muslims ,Modi ,Thanjavur ,People's Power Thanjavur District ,Deva ,State Treasurer ,Kaliappan ,Tamil National People's Front ,Chief Executive ,Arunsori ,Communist Party of India ,Municipal Deputy Secretary ,Murthy ,Auto Sangam Security Council ,Coordinator ,Dinakaran ,
× RELATED திருவையாறு பகுதியில் பள்ளிவாசல்களில் பக்ரீத் தொழுகை