×
Saravana Stores

லுங்கி, பனியன் அணிந்து மூட்டை தூக்கும் புதுவை மாஜி அமைச்சர்: வீடியோ வைரல்

புதுச்சேரி: காரைக்காலில் லுங்கி, பனியன் அணிந்தபடி புதுவை மாஜி அமைச்சர் மூட்டைகளை தலையில் சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறு தொகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (62). மூத்த காங்கிரஸ் நிர்வாகி. இவர் கடந்த முறை காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக இருந்தார். இவர் காரைக்கால் தொகுதியில் இருந்து 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தல் தோல்வியடைந்தார். இருப்பினும் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அடிப்படையில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், அமைச்சராக இருந்தபோதும் தனது நிலத்தில் விவசாய பணிகளை கண்காணித்து வந்தார். காரைக்கால் மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி தொடங்கி உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணனே தனது விவசாய நிலங்களுக்கு தேவையான உரம் முட்டைகளை தலையில் சுமந்து பணிகளை மேற்கொண்டு வந்தார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், காரைக்கால் அம்பரகத்தூரில் உள்ள தனது வீட்டில் கமலக்கண்ணன் கைலி, பனியன் அணிந்து நின்றபடி டிராக்டரில் இருந்து நெல் மூட்டையை தலையில் சுமந்து சென்று மில்லுக்கு கொண்டுவந்து இறக்கி வைக்கிறார். இதைப் பார்த்து வியப்படைந்த காங்கிரஸ் கட்சிக்காரர் ஒருவர், ‘நாங்க ஓட்டு போட்டா… நீங்க இந்த வேலைய பார்ப்பதா…’ என கேட்கிறார்.

அதற்கு சிரித்தபடி பதிலளிக்கும் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன்,‘இல்ல… நாங்க இந்த வேலையெல்லாம் செஞ்சாதான் சாப்பாட்டுக்கு அரிசி கிடைக்கும். வீட்டுல மாடு மூலமாக பால், தயிர் கிடைக்கும்,’என்கிறார். மேலும் அவ்வழியாக சென்ற பொதுமக்களில் ஒருவரை பார்த்து அவருக்கு காய்கறி இல்லாம குழம்பு வைக்க முடியுமா? என நகைப்புடன் கூறியதோடு அடுத்த மூட்டையை தூக்க சென்ற காட்சியும் இடம்பெற்றிருந்தது.

The post லுங்கி, பனியன் அணிந்து மூட்டை தூக்கும் புதுவை மாஜி அமைச்சர்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Puducherry ,Karaikal ,Kamalakannan ,Karaikal Tirunallaru ,Senior ,Congress ,
× RELATED புதுவையில் தாமதமாக விண்ணப்பித்த மாணவி கலந்தாய்வில் பங்கேற்கலாம்