‘‘கூட்டணியில இருந்து வெளியேறியதால சேலத்துக்காரர் மீதான தாமரையின் கடுப்பு இன்னும் தொடருதாமே..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மழை ஓய்ந்தாலும் தூவானம் விடவில்லை என்பது போல், இலைக்கட்சியின் பொதுச்செயலாளரான சேலத்துக்காரரை அட்டாக் பண்ணுவதில் குறியாக இருக்காங்களாம் தாமரை கட்சி நிர்வாகிங்க.. சேலத்துக்காரரின் சொந்த ஊரில், மீண்டும் அவரை அட்டாக் பண்ணி இருக்காராம் தாமரைக்கட்சியின் மாநில துணைத்தலைவரு.. பிரஸ்மீட் ஒன்றில் 9 பொதுத்தேர்தலை பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன். எதிர்க்கட்சிகளுக்கு ஒரு இடமும் கிடைக்காதுன்னு ஏகத்துக்கும் பில்டப் கொடுத்தாராம்.. அப்படியே சேலத்துக்காரர் பக்கம் தாவினாராம்.. கதர்கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து, பிரைம் மினிஸ்டர் பேசியதற்கு சேலத்துக்காரரு எதிர்ப்பு தெரிவிச்சிருக்காரு.. மத்தவங்க எதிர்ப்பு தெரிவிச்சா ஒத்துக்கலாம்..
ஆனால் சேலத்துக்காரரு பிரைம் மினிஸ்டர் பேச்சையும் முழுசா கேட்காம, தேர்தல் அறிக்கையையும் முழுசா படிக்காம, கருத்து தெரிவிச்சிருக்காரு.. அவரு படிக்கலை என்பதை விட, ஒண்ணுமே தெரியல என்பதுதான் உண்மையென பயங்கர சூடானாராம்.. அது சரி, ஒரு கணக்கு போட்டு வச்சிருந்த நம்ம கட்சியோட, சேலத்துக்காரரு கூட்டணி போடவில்லை.. அதனால் ஏற்படும் பாதகம் எல்லாம் இவருக்கு நல்லாவே தெரியும்.. அந்த கடுப்பில் தான் சேலத்துக்காரர் மேல ஏகத்துக்கும் எகிறாருன்னு கிசுகிசுத்தார்களாம் உடனிருந்த தாமரை நிர்வாகிகள்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புதுச்சேரியில் பாஜவுக்கு உள்குத்து வைக்க இலைக்கட்சி நடத்திய திரைமறைவு தேர்தல் விளையாட்டு பற்றி’’ சொல்லுங்க என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. தேசிய கட்சிகளான காங்கிரசும், பாஜவும் நேரடியாக மல்லுக்கட்ட, 3வதாக நாங்களும் இருக்கிறோம் என்பதை களத்தில் நிஜமாக்கும் வகையில் போட்டா போட்டியுடன் 4 பிராந்தியங்களுக்கும் சென்று தேர்தல் பிரசாரம் செய்தது இலைக்கட்சி. ஒரு எம்எல்ஏகூட இல்லாத அக்கட்சி களத்தில் காட்டிய தீவிர பிரசார யுக்தியை பார்த்து பிரதான கட்சிகள் பதிலளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. ஆனால் தேர்தல் வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய நாட்களில் ஒரேயடியாக தேர்தலை புறக்கணிப்பதாக வேட்பாளர் உளறியதோடு, ரத்து செய்ய கடிதம் கொடுக்கப்போவதாக தடாலடி காட்டினார். அத்தோடு மாநில தலைமையை கையில் வைத்திருந்த அன்பு அழகானவரும், ஆதரவாளர்களுடன் பைக் பேரணி நடத்தி மாவட்ட தேர்தல் அதிகாரி ஆபீசில் போராட்டங்களில் ஈடுபட்டு ஆவேசம் காட்டினார்.
அதன்பிறகு மாநில தலைமையும், வேட்பாளரும் சைலன்ட் மூடுக்கு திரும்பவே அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பமடைந்து போனாங்க.. இலைக்கட்சியின் உண்மையான விசுவாசிகளோ கிடைக்கிற ஓட்டையும் இவங்களே கெடுத்து விடுவாங்க போலன்னு முணுமுணுத்தாங்களாம்.. ஆனால் அதையும் தாண்டி இலைக்கட்சி கடைசிநேர தேர்தல் மவுன புரட்சியானது, வாக்குப்பதிவு நாளின்போது பிரதான தேசிய கட்சிகளில் ஒன்றுக்கு சாதகமாகவும் மற்றொன்றுக்கு எதிராகவும் திரும்பி விட்டதாக அரசியல் கணிப்புகள் தற்போது உலாவுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்காமல் புறந்தள்ளிய பாஜவுக்கு இத்தேர்தலில் உள்குத்து வைக்கும் வகையில் இலைக்கட்சி நடத்தியுள்ள திரைமறைவு தேர்தல் விளையாட்டுதான் இது என ஊர்முழுக்க பேச்சா இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘உள்கட்சி எதிரிகள்தான் சதிவலை பின்னி தாமரை கட்சி வேட்பாளர ரூ4 கோடியில சிக்க வைச்சுட்டதா அல்வா தொகுதி தேசியக்கட்சியினர் ெகாதிக்கிறாங்களாமே..’’ என கேட்டார் விக்கியானந்தா. ‘‘தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 39 நாட்களுக்கும் மேல் இருக்கிறது என்பதால் அனல் பறக்கும் தேர்தல் களத்தில் சுற்றிச்சுழன்று பணியாற்றிய வேட்பாளர்கள் எல்லாம் ரிலாக்சாகி விட்டனராம்.. ஆனால் ஒரு வேட்பாளர் மட்டும் வலையில் சிக்கிய மீனாக துடிக்கிறாராம்.. தேர்தல், சூழ்ச்சி, பணம் பறிமுதல், விசாரணை, சம்மன் என அடுத்தடுத்து நெருக்கடிகள் அவரை சுற்றிச் சுழல்கிறதாம்.. அதாவது, சென்னையில் ரூ4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், நெல்லை தொகுதி தேசிய கட்சியின் வேட்பாளருக்கு போலீஸ் முதல்முறை சம்மன் அனுப்பிய போது, தேர்தல் பணி இருக்கிறது என காரணம் கூறி சமாளித்து விட்டாராம்..
இந்நிலையில் 2வது முறையாக அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனராம்.. போலீசார் தன் கடமையை செய்கின்றனர் எனக் கூறிய வேட்பாளர், தன்னை போலீசிடம் சிக்க வைத்தது அரசியல் சூழ்ச்சி என பகிரங்கமாகவே கூறி வருத்தப்பட்டாராம்.. எதிர்க்கட்சியினரை கூட சமாளித்து விடலாம், ஆனால் உள்கட்சி எதிரிகள் சம்பந்தப்பட்ட வேட்பாளரை சிக்க வைக்க வசமாக வலை விரித்தனராம்.. இந்த வலையில் சிக்கியுள்ள அவர் பணம் போனாலும் பரவாயில்லை, விசாரணை என்று அடுத்தடுத்து வருகிறதேன்னு கூறி வருத்தப்பட்டாராம்.. ஏற்கனவே கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக இருக்கும் அவர் தற்போது மக்களவைத் தேர்தலில் சீட் வாங்கியது உட்கட்சியினர் பலருக்கும் பிடிக்கவில்லையாம்.. தற்போது கட்சியின் மாநில துணைத் தலைவராக இருக்கும் அவர் எங்கே தன்னை முந்தி விடுவாரோ என்ற முக்கிய தலையின் அச்சத்தில்தான் உட்கட்சி எதிரிகள் அவருக்கு சதி வலை பின்னி விட்டார்கள் என கொதிக்கின்றனராம் அல்வா தொகுதியின் தேசிய கட்சியினர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘விஜிலென்ஸ் ரெய்டால அடுத்து யாரு சிக்கப்போறாங்களோ தெரியலையேன்னு அச்சத்துல இருக்காங்களாமே எங்கே..’’ என ஆர்வத்தோட கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டம் காட்டுப்பாடி தாலுகாவுல மிஸ்டர் வலம் பேர் ஊர் ஆட்சிக்கு உள்பட ஏரியாவைச் சேர்ந்தவரு, பு என்று முடியுற 3 எழுத்து பெயர் கொண்டவரு. இவரு குப்பம் என்று முடியுற பஞ்சாயத்துல செக்ரட்ரியாக பணிபுரிஞ்சு வர்றாரு. இவரு, காட்டுப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்கள்ல வேலை செய்றபோது, ரூல்ஸ்ச மீறி சொத்துகளை வாங்கி குவிச்சதா புகார்கள் வந்திருக்குது.. இதனால, இவர் மேல் விஜிலென்ஸ் பார்வையும் விழுந்திருக்குதாம்.. அவரை நோட்டமிட்ட விஜிலென்ஸ் அவர் வீட்டுக்கே ரெய்டு போயிருக்காங்க.. சில முக்கிய கோப்புகளையும் அங்கிருந்து எடுத்துக்கொண்டு போயிருக்காங்களாம்..
இதனால, காட்டுப்பாடி பிளாக் மொத்தமும் அடுத்து யாரு சிக்கப்போறாங்களோ தெரியலையேன்னு அச்சத்துல ஆடிப்போயிருக்காங்களாம்.. ரூல்ஸ்ச மீறுனா, இப்ப இல்லன்னாலும், எப்பயாவது மாட்டுவாங்கன்னு சொல்றாங்களே, அது இது தானான்னு அந்த டிபார்ட்மென்ட்ல பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
The post ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி வேட்பாளரை சிக்க வைத்த முக்கிய தலைகளின் சதியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.