×

கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்

சென்னை: ஒரு மண்டல தலைவருக்கு குறைந்தபட்சம் 70 பூத்துகள் அப்படி இருக்க ரூ.2 லட்சம் வரை ஒவ்வொரு மண்டல தலைவர்களும் கையாடல் செய்துள்ளார்கள், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பணம் தரவில்லை என்ற ரீதியில் அவர்கள் தங்களது ஆடியோ மெசேஜ்களை சமூக வலைதளம் மற்றும் வாட்ஸ் அப் குரூப்புகளில் பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் பாஜ சார்பில் வேட்பாளர்கள் களம் இறங்கப்பட்ட நாள் முதல் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து நிலவி வருகின்றன. பாஜக தேர்தலில் யாருக்கும் பணம் தர மாட்டார்கள் என்று கட்சியின் தலைவர் அண்ணாமலை மேடைக்கு மேடை பேசி வந்தார். ஆனால் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜ சார்பில் பணம் கொடுத்து பலர் சிக்கியது வெட்ட வெளிச்சமானது.

இது மட்டுமன்றி வெற்றி வாய்ப்பு உள்ள பல தொகுதிகளில் பாஜவினர் பண பட்டுவாடாவில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் நயினார் நாகேந்திரனின் உதவியாளரிடம் பணம் சிக்கியது முதல் பல மோசடிகளில் பாஜ ஈடுபட்டது அம்பலமானது. இந்நிலையில் தற்போது பாஜ சார்பில் வாட்ஸ் அப் குரூப்களில் அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஆடியோ பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். பல்வேறு ஆடியோ பதிவுகளில் கட்சிக்காக பல ஆண்டு உழைத்து உள்ளோம். ஆனால் மண்டல தலைவர்கள் மேலிடம் கொடுத்த பணத்தை மொத்தமாக அபகரித்துக் கொண்டனர். கட்சிக்காக பாடுபட்ட எங்களுக்கு பணம் வந்து சேரவில்லை என்ற ரீதியில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் தெற்கு மண்டல் தலைவர் பிரபா பெரம்பூர் மத்திய மண்டல தலைவர் கஸ்தூரி திரு.வி.க நகர் மண்டல தலைவர் முரளி ஆகியோருக்கு எதிராக பல்வேறு ஆடியோ மெசேஜ்கள் தொடர்ந்து வாட்ஸ் அப் குரூப்புகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அந்த ஆடியோவில் ஒரு பூத்துக்கு மேலிடம் ரூ.8000 வழங்கியது, அதில் ரூ.5000 மட்டுமே மண்டல் தலைவர்கள் செலவு செய்தார்கள். மீதி ரூ.3 ஆயிரம் அவர்கள் எடுத்து விட்டார்கள், ஒரு மண்டல தலைவருக்கு குறைந்த பட்சம் 70 பூத்துகள் வரை வருகிறது அப்படி இருக்க ரூ.2 லட்சம் வரை ஒவ்வொரு மண்டல தலைவர்களும் கையாடல் செய்துள்ளார்கள் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பணம் தரவில்லை என்ற ரீதியில் அவர்கள் தங்களது ஆடியோ மெசேஜ்களை வாட்ஸ்அப் குரூப்புகளில் போட்டு வருகின்றனர்.

பெரம்பூர் தெற்கு மண்டல பகுதியைச் சேர்ந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்ராஜ் என்கின்ற கடம்பூர் வேல்ராஜ் ஒரு ஆடியோ மெசேஜ் போட்டு உள்ளார், அதில் எங்களுக்கு முறையான உணவு வழங்கவில்லை. பிரியாணி சரியில்லை என மண்டல் தலைவரிடம் போய் சொன்னால் அவர் சிரித்துக் கொண்டே அப்படியா சந்தோஷம் எனக் கூறுகிறார். பிரசாரத்திற்கு வந்தவர்களுக்கு பணம் கொடுத்தார்களா என கேட்டால் அது பற்றி பேச மறுக்கிறார். கட்சியில் இவ்வளவு நாட்களாக உழைத்தவர்களுக்கு எதுவும் வரவில்லை, ஒவ்வொரு மண்டலத்திலும் மண்டல தலைவர்கள் பணத்தை அதிகமாக கையாடல் செய்துள்ளார்கள் என்ற ரீதியில் அந்த ஆடியோவில் பேசியுள்ளனர். இதுபோன்று ஒவ்வொரு மண்டல பகுதியிலும் கட்சி நிர்வாகிகள் தங்களது ஆதங்கங்களை ஆடியோவாக பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

The post கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : BJP ,CHENNAI ,Zone ,Dinakaran ,
× RELATED நில மோசடி புகாரில் நடிகை கவுதமியின் மாஜி மேலாளர் கைது