ஐதராபாத்: அடிப்பது எளிதில்லை என்றாலும் விராட் கோலி முயற்சித்திருக்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோலி அரைசதம் அடித்தார். ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 51 ரன்களையும், படிதார் 50 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர், 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி, 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக இந்த போட்டியில் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி முதல் 18 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து மிரட்டினார். ஆனால், அவர் அடுத்த 25 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். அந்த வகையில் 51 (43 பந்துகள்) ரன்களை 118 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே அடி வந்தார் விராட் கோலி.
இந்நிலையில் விராட் கோலியிடம் இது போன்ற ஆட்டத்தை பெங்களூரு அணி எதிர்பார்க்கவில்லை என்று நேரலையில் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறியதாவது; “விராட் கோலியிடமிருந்து சிங்கிள்கள் மட்டுமே வருகிறது. அடுத்ததாக தினேஷ் கார்த்திக் மற்றும் மகிபால் வருவதற்காக காத்திருக்கின்றனர். எனவே நீங்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து விளையாட முயற்சிக்க வேண்டும். படிதாரை பாருங்கள். அவர் ஏற்கனவே ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் அடித்துள்ளார். அவரும் நினைத்திருந்தால் சிங்கிள் எடுத்திருக்கலாம்.
ஆனால் அங்கே வாய்ப்பு இருந்ததால் அவர் அதைத் தவற விடவில்லை. எனவே அடிப்பது எளிதில்லை என்றாலும் விராட் கோலி முயற்சித்திருக்க வேண்டும். நடுவில் அவர் பார்மை இழந்ததுபோல் தெரிந்தார். குறிப்பாக 31 – 32 ரன்களிலிருந்து அவுட்டாகும் வரை அவர் பவுண்டரிகளை அடிக்கவில்லை. எனவே நாளின் இறுதியில் நீங்கள் முதல் பந்திலேயே அவுட்டாவதையும் 14 – 15 ஓவர்கள் வரை விளையாடி 118 ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டாவதையும் உங்களுடைய அணி விரும்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
The post ஐதராபாத் – பெங்களூரு அணிகள் இடையே நடந்த போட்டி; விராட் கோலியை விமர்சனம் செய்த சுனில் கவாஸ்கர்! appeared first on Dinakaran.