×
Saravana Stores

நாகர்கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு

*தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் மயக்கம்

நாகர்கோவில் : நாகர்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு ஏற்பட்டதால், தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் மயக்கம் அடைந்தனர். நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு கிருஷ்ணன்கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதி மக்களுக்கு தினமும் ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யும் வகையில் புத்தன்அணை குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது.

இதற்காக 32 கிலோமீட்டர் தூரம் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு மாநகரம் முழுவதும் குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. தற்போது பரிட்சார்த்த முறையில் புத்தன் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்யப்பட்டு குறிப்பிட்ட பகுதிக்கு விநியோகம் செய்யப்பட்டுகிறது.
அவ்வாறு கொண்டுவரப்படும் தண்ணீரில் குளோரின் வாயு கலக்கப்படும். தண்ணீரில் குளோரின் கலப்பதற்காக 4 சிலிண்டர்கள் வைக்கப்பட்டு உள்ளது. ஒரு சிலிண்டரில் ஒரு டன் அளவிற்கு குளோரில் வாயு இருக்கும்.

நேற்று காலை கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் சிலிண்டரிலிருந்து குளோரின் வாயு கசிந்து வெளியேறியது. இதனால் அருகில் உள்ள வாத்தியார்விளை, தெலுங்கு செட்டி தெரு பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே சுத்திகரிப்பு நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவை அடைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. தொடர்ந்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்திய குமார், உதவி தீயணைப்பு அதிகாரி துரை ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை தோளில் மாட்டிக்கொண்டு பாதுகாப்பு கவசத்துடன் தண்ணீரை வேகமாக பீச்சி அடித்து குளோரின் வீரியத்தை குறைத்தனர். பின்னர் சிலிண்டரில் இருந்து குளோரின் வாயு வருவதை அடைத்து சரி செய்தனர்.

குளோரின் கசிவால் அங்கு கட்டுமான வேலைக்கு வந்த தொழிலாளர்கள் ஜெயக்குமார் உட்பட 3 பேர், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் நைனார், ஆபிரகாம் ஆகியோருக்கு கண் எரிச்சல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் தீயணைப்பு வீரர்கள் சுயம்பு சுப்புராமன், வரதராஜன், கருப்பசாமி ஆகியோருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் கிருஷ்ணன் கோயில் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சைப் பெற்று திரும்பினர். வாத்தியார்விளையை சேர்ந்த செந்தில் என்பவருக்கு மயக்கம் ஏற்பட்டது.

அவர் வெட்டூர்ணிமடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பினார். நாகர்கோவில் மாநகராட்சி டாக்டர்கள் அடங்கிய குழுவினர் சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றியுள்ள வீடுகளில் உள்ள மக்களுக்கு மூச்சுதிணறல், வாந்தி, மயக்கம் போன்றவை உள்ளதா என ஆய்வு செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது நேற்று காலை காலியான சிலிண்டரின் மூடி திறந்து குளோரின் வாயு வெளியேறியது. காற்று வேகமாக வீசியதால் வாயு வேகமாக பரவியது என்றார்.

இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், குளோரின் வாயு வெளியேறியதும் பணியாளர்கள் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வேகமாக செயல்பட்டிருந்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. குளோரின் அதிக அளவு வெளியே பரவியதால் பலருக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டது என்றனர்.

தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் பைப் நாசம்

குளோரின் வாயு பரவி இருந்தபோது தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடிக்க பயன்படுத்தப்பட்ட நீள குழாயில் பொருத்தப்பட்டு இருந்த செம்பு உலோகத்தால் ஆன நுனிபகுதி நாசமானது.

பாதுகாப்பான இடத்திற்கு சென்ற பொதுமக்கள்

குளோரின் வாயு கசிவு ஏற்பட்டவுடன் அந்த பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், மயக்க உணர்வு, வாந்தி வருவதற்கான அறிகுறிகள் தெரிந்துள்ளது. உடனே அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். சுத்திகரிப்பு நிலையத்தை ஒட்டியுள்ள வீடுகளில் இருந்த 12 வயது சிறுமி, 10 வயது சிறுவன் ஆகியோருக்கு வாயில் நுரைபோல் வந்துள்ளது. வீட்டில் இருந்த பெற்றோர்கள் அதிக தண்ணீர் மற்றும் பழங்களை வாங்கி கொடுத்துள்ளனர். குளோரின் வாயு பாதிப்பால் வீட்டு மாடியில் தொட்டியில் வைத்திருந்த செடிகள் கருகின.

பாதுகாப்பாக வைக்க வேண்டும்

வெளிநாட்டில் குளோரின் வாயு பயன்படுத்தப்படும் நிறுவனத்தில் வேலை செய்து வரும் வாத்தியார்விளையை சேர்ந்த ஒருவர் கூறியதாவது: குளோரின் வாயு ஆபத்தானது. குளோரின் சிலிண்டரில் மீட்டர் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். மீட்டர் மூலம் சிலிண்டரில் எவ்வளவு குளோரின் இருக்கிறது என கணக்கிடமுடியும். வெளிநாடுகளில் குளோரின் வாயு சிலிண்டர்களை தொழில் நிறுவனங்களின் மேல் பகுதியில் வைத்து பயன்படுத்துவார்கள். பயன்படுத்தும்போது கசிவு ஏற்பட்டால், கீழ் பகுதியில் இருக்கும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. இந்த முறையை இங்கு பயன்படுத்தினால், கசிவு ஏற்பட்டால் கூட மேல்நோக்கி வாயு சென்றுவிடும் என்றார்.

ஆணையர் நேரில் ஆய்வு

மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா, பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமார் ஆகியோர் வாயு கசிவிற்கான காரணம் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தனர்.

பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சி பகுதியில் விநியோகிக்கும் தண்ணீரில் முன்பு திரவநிலையில் உள்ள குளோரின் கலக்கப்பட்டது. தற்போது குளோரின் வாயு கலந்து விநியோகிக்கப்படுகிறது. இது தொடர்பாக சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. காலி சிலிண்டரிலிருந்து சிறிது குளோரின் வாயு கசிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றனர்.

The post நாகர்கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் மாநகராட்சியில் பழைய பொருட்கள் ஏலம் தள்ளிவைப்பு