கொல்கத்தா: ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறும் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடரஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் களம் காண உள்ளன. நடப்புத் தொடரில் பாதிக்கும் மேல் லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த 2 அணிகளும் முதல்முறையாக மோத இருக்கின்றன. கூடவே இந்த தொடரில் இரு அணிகளும் மோதும் ஒரே ஆட்டம் இது மட்டும்தான். ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி வலுவாகவே உள்ளது. அந்த அணி இதுவரை விளையாடி 7 ஆட்டங்களில் ஐதராபாத், பெங்களூர், டெல்லி, லக்னோ, பெங்களூர் அணிகளை வென்று சாதித்துள்ளது. கூடவே 2 ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் சென்னை, முதல் சாம்பியன் ராஜஸ்தான் அணிகளிடம் மட்டும் தோல்வியை சந்தித்துள்ளது. இதுவரை நரைன், ராணா, ரஸ்ஸல், ரகுவன்ஷி, வெங்கேடேஷ் அய்யர், மிட்செல் ஸ்டார்க், வைபவ், வருண் சக்கரவர்த்தி என அணிகளில் உள்ள யாராவது சிலர் அதிரடி காட்டி அணியை கரை சேர்த்து விடுகின்றனர்.
அதனால் அபார வெற்றிகளை குவித்துள்ள கொல்கத்தா, அதை தொடரும் நோக்கில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. பஞ்சாப் இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களில், 2ல் டெல்லி, குஜராத் அணிகளை மட்டும் வீழ்த்தி இருக்கிறது. எஞ்சிய 6 ஆட்டங்களில் பெங்களூர், லக்னோ, ஐதராபாத், ராஜஸ்தான், மும்பை, குஜராத் அணிகளிடம் தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு குறைந்துள்ளது. வாய்ப்பை தக்க வைக்க வேண்டும் என்றால் தொடர் வெற்றிகள் அவசியம். அதை கொல்கத்தாவின் சொந்த மண்ணில் வசப்படுத்த போராட வேண்டி இருக்கும். கூடவே காயம் காரணமாக கேப்டன் ஷிகர் தவான் விலகி இருப்பது அணிக்கு பின்னடைவாக உள்ளது. எனினும் பிரப்சிம்ரன், ஷஷாங் சிங், ஜிதேஷ் சர்மா, ரபாடா, அர்ஷ்தீப், ஹர்ஷல், அஷூதோஷ் ஆகியோர் தங்கள் அதிரடியை இன்று முழுமையாக வெளிப்படுத்தினால், கொல்கத்தாவின் சவாலை சமாளிக்கலாம்.
நேருக்கு நேர்
* இதுவரை 32 ஆட்டங்களில் இரு அணிகளும் மோதியதில் கொல்கத்தா 21, பஞ்சாப் 11 ஆட்டங்களில் வென்று உள்ளன.
* இந்த 2 அணிகளுக்கும் இடையிலான ஆட்டங்களில் அதிகபட்சமாக கொல்கத்தா 245, பஞ்சாப் 214 ரன் விளாசியுள்ளன. குறைந்தபட்சமாக பஞ்சாப் 119, கொல்கத்தா 109 ரன் எடுத்துள்ளன.
The post நடப்புத் தொடரில் முதல் மோதல்: கொல்கத்தாவை சமாளிக்குமா பஞ்சாப் appeared first on Dinakaran.