×

மனைவியை கொன்று கணவர் தற்கொலை

தென்காசி: குடும்ப பிரச்னையால் மனைவியை உலக்கையால் அடித்து கொலை செய்த கணவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே கீழதிருவேங்கடம் தெற்கு பாறைப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (60). இவர் தனியார் நிறுவன காவலாளி. இவரது மனைவி சீதாலட்சுமி (57). கூலித் தொழிலாளி. இவர்களுக்கு அழகர்சாமி, அய்யனார், சமுத்திரக்கனி என்ற 3 மகன்கள், காமாட்சி என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் 2 மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர். மற்றொரு மகனுக்கு திருமணம் ஆகவில்லை. அவரும் சென்னையில் வசித்து வருகிறார். சொந்த ஊரில் வசித்து வந்த கருப்பசாமி, சீதாலட்சுமிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி, வீட்டில் கிடந்த உலக்கையால் மனைவி சீதாலட்சுமியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தபடி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீஸ் விசாரணைக்கு பயந்த கருப்பசாமி, வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடினார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், கருப்பசாமியை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி கருப்பசாமி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனைவியை கொன்று கணவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Karuppasamy ,South Bhikhapatti Naduthru ,South Thiruvenkatam ,Thiruvenkatam, Tenkasi district ,
× RELATED தென்காசியில் தெரு நாய் கடித்ததில் 8 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி!!