டெல்லி : தன்னை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்த மோடியின் பேச்சு பேசுபொருளான நிலையில் காங். தலைவர் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கார்கே எழுதியுள்ள கடிதத்தில்,”காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத அம்சங்கள் பற்றி நீங்கள் பேசி வருவதால் உங்களை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன். பிரதமர் என்ற முறையில் பொய்யான அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்பதற்காகவே நேரில் சந்தித்து விளக்கம் தர விரும்புகிறேன்.அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். காங். தேர்தல் அறிக்கை இளைஞர், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கானது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாத அம்சங்கள் பற்றி உங்கள் ஆலோசகர்கள் உங்களுக்கு தவறான தகவல்களை தெரிவிக்கின்றனர்.
முதற்கட்ட தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்காததால் காங். தேர்தல் அறிக்கையை நீங்களும், பாஜக தலைவர்களும் விமர்சிக்கின்றனர். உங்களின் பேச்சு தனக்கு எந்தவித அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. முதற்கட்ட தேர்தலில் கிடைத்த அதிர்ச்சியால் இப்படி பேசுவீர்கள் என்பது நாங்கள் எதிர்பார்த்தது தான். இவ்வாறு பேசி நாற்காலியின் கண்ணியத்தை நீங்களே குறைத்து கொள்கிறீர்கள். காங்கிரஸ் கட்சி ஒடுக்கப்பட்ட, ஏழை மக்கள் மற்றும் அவர்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. ஆனால் உங்கள் அரசுக்கு ஏழைகள் பற்றி எந்தவித அக்கறையும் இல்லை. பெருநிறுவனங்களுக்கு உங்கள் அரசு வரியை குறைத்து, மாத ஊதியம் பெறும் நடுத்தர மக்களுக்கு வரியை அதிகரிக்கிறது. நேரில் விளக்கம் அளிப்பதன் மூலம் தவறான தகவல்களை நீங்கள் பேசுவதை தடுக்க முடியும் என நம்புகிறோம்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான தகவல் பரப்புவதா? நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கிறேன் : பிரதமருக்கு கார்கே கடிதம்!! appeared first on Dinakaran.