×

எனக்கு இவ்வளவு நாட்கள் கொடுத்த அன்பையும், ஆதரவையும் இப்படத்துக்கும் கொடுங்கள்: தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ்

கவுதம் கார்த்திக், புகழ், புதுமுகம் ரேவதி நடித்த ‘1947 ஆகஸ்ட் 16’ படத்தை தயாரித்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில், ‘எனக்கு இவ்வளவு நாட்கள் கொடுத்த அன்பையும், ஆதரவையும் இப்படத்துக்கும் கொடுங்கள். இக்கதையை எனது உதவி இயக்குனர் பாலாஜி படித்துவிட்டு, பிறகு என்னைப் படிக்கச் சொன்னார். பிறகு நான் தயாரிக்க முடிவு செய்தேன். எனது உதவியாளர் பொன்குமார் இயக்கியுள்ளார். கவுதம் கார்த்திக் அற்புதமான உழைப்பைக் கொடுத்துள்ளார். அவரது தந்தையும், பிரபல நடிகருமான கார்த்திக்கை நினைத்துப் பார்க்காமல் ஒரு ரொமான்ஸ் காட்சியை உருவாக்க முடியாது.

‘துப்பாக்கி’ படத்தில் ஜெயராம் வரும் ஒரு காட்சியைக்கூட கார்த்திக்கை மனதில் வைத்துதான் உருவாக்கினேன். கவுதம் கார்த்திக்கிற்கு திரையுலகில் மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. புதுமுகம் ரேவதி நன்றாக நடித்துள்ளார். இப்படத்துக்குப் பிறகு அவருக்கு நிறைய புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கும். இப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் திரைக்கு வருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு அனைவரும் வரவேண்டும். மனிதனால் கொடுக்க முடியாத விஷயத்தைத்தான் கடவுள் கொடுப்பார். அதனால், நம்மால் கொடுக்க முடிந்ததை நாம் கொடுக்க வேண்டும்.

எனக்கு அவ்வாறு பலர் உதவி செய்துள்ளனர். அதனால், நானும் பலருக்கு உதவி செய்து வருகிறேன். ‘1947 ஆகஸ்ட் 16’ படத்தை நான் பார்த்துவிட்டேன். நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகச்சிறப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தின் செட்டுகளை படவேடு அருகிலுள்ள கிராமத்தில் மிகவும் தத்ரூபமாக அமைத்துக் கொடுத்து அசத்திய ஆர்ட் டைரக்டர் சந்தானம், இப்போது எங்கள் மத்தியில் இல்லாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. ஷான் ரோல்டன் மிகச்சிறந்த இசையை வழங்கியுள்ளார்’ என்றார்.

Tags : AR Murugadoss ,Gautham Karthik ,Revathi ,Balaji ,
× RELATED ஸ்ரீவில்லி. ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கம் சென்றது