×

மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு : பாஜக தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக பா.ஜ.க.வுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதம், சாதி, சமுதாயம், மொழி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பு பேச்சை பேசியதாக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த பிரசார கூட்டத்தில் மோடி பேசுகையில், “மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நாட்டின் சொத்துக்களில் சிறுபான்மையினருக்கு தான் முதல் உரிமை என்று கூறியிருந்தார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், தாய்மார்கள், சகோதரிகளிடம் இருக்கும் தங்கத்தை கணக்கெடுத்து அதை மற்றவர்களுக்கு கொடுப்போம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது நகர்புற நக்சல் மனப்பான்மை. தாய்மார்களே, சகோதரிகளே உங்கள் மாங்கல்யத்தை கூட விடமாட்டார்கள். அந்த அளவுக்கு தரம் தாழ்த்து நடப்பார்கள். மன்மோகன்சிங் சொன்னபடி, சிறுபான்மையினருக்கு தான் நாட்டின் சொத்தில் முதல் உரிமை என்றால், அந்த நகைகளை யாருக்கு கொடுப்பார்கள். அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் முஸ்லீம்களுக்கு, ஊடுருவல்காரர்களுக்குதான் அந்த நகைகள் தரப்படும் என்று பேசினார்.

பிரதமர் மோடியின் இந்த வெறுப்பு பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தில் புகார்களும் குவிந்தன. இந்த நிலையில், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பேசும் பேச்சுக்கு கட்சி தலைவர்களே பொறுப்பு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 77-வது பிரிவு கூறுகிறது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நட்சத்திர பேச்சாளர்கள் நடவடிக்கைக்கு அந்தந்த கட்சி தலைவர்களே பொறுப்பு என்ற அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கட்சியின் உயர்நிலையில் உள்ளவர்கள் பேசும் பேச்சால் தீவிர விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதனிடையே கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்த பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு : பாஜக தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Election Commission ,BJP ,Delhi ,PM Narendra Modi ,J. K. ,Election Commission of India ,Congressional Election Commission ,Dinakaran ,
× RELATED மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல்...