×

பழம் பகைகொண்ட மகரக்கண்ணன்

யுத்த காண்டம்

கம்பராமாயணத்தில் மிகச் சிறிய பாத்திரம் ராவணனுக்கு நெருங்கிய ரத்த பந்தம் உடையவன். தன் உடன் பிறப்பாகிய கரனின் புதல்வன் மகரராட்ஷசன் என்று பெயரைப் பெற்றவன். மகரம் போன்ற (மீன்) கண்ணைப் பெற்றதால், “மகரக் கண்ணன்’’ என்று அழைக்கப்பட்டான். “மகரக்கண்ணன் வதை படலம்’’ என்றே யுத்த காண்டத்தில் சிறப்பு பெற்ற பகுதியாகும். ராவணன் தன் படைத் தலைவர்கள் தூமி ராட்சசன், அனுமானுடனும், மகாபாரிசுவன் அங்கத குமாரனுடனும், மாலி நீலனுடனும். பிசாசன் பனசனுடனும், சூரிய சத்துரு சுக்ரீவனுடனும், யஜ்ஞஹா இளைய பெருமாள் லட்சுமணனுடனும் இணைந்து போர்புரிந்தனர். இறுதியில் அனைவரும் மரணத்தின் வாசலை எதிர் கொண்டனர்.

இச்செய்தியை அடுத்து, என்ன நடக்கும் என அறியாது, இறுமாப்புடன் கர்வத்துடன் 10 தலைகள் கொண்டவன் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறான். அப்பொழுது பதறி அடித்துக் கொண்டு, தலை தப்புவது தம்பிரான் புண்ணியம் என்று அலறியவாறு ஓடுகின்றார் ராவணனின் தூதர்கள். “இலங்கை வேந்தே! தேவருலகத்தை நினைத்த அக்கணமே, சென்று உலாவி வருபவரே! சாம வேத பிரியரே! ஓராயிரம் படைகள் வந்தாலும் துணிவுடன் எதிர்த்து நிற்கும் பராக்கிரம தோள்கள், வன்மையும் மனதிடமும் உடையவரே! தேவர்கள் அஞ்சி நடுங்கும் பேராண்மை உடையவரே! நெஞ்சை நிமிர்த்தி எத்தகைய இடியும் ஏற்கும் பிரம்மதேவனின் வழி வந்தவரே, இலங்கீஸ்வரனே! எதை உரைப்பது எப்படி தவிப்பது என்று அறியவில்லை.

போர்க்களத்தில் நமது உன்னதமான அஞ்சா நெஞ்ச பொக்கிஷமான சிகாமணி ரத்தினங்கள் மண்ணைக் கவ்வி மரண வேதனையில் துடி துடித்து மரண தேவனின் பிடியில் சிக்கிமாண்டனர்.
இலங்கைக்கு வந்து போர்புரிந்தது வானரக் கூட்டங்களா? இல்லை முக்காலும் தவ ஆற்றலைப் பெற்ற தேவர்கள் மனம் மகிழும் அபூர்வசக்தியைப் பெற்ற அம்சங்களா? என்பதை அறிய இயலவில்லை. நம் அரக்கர் கூட்டம் குலை நடுங்கும்படி தரையில் சாய்ந்தனரே.

“ஏகித்தனி மன்னர் இருந்துழி புக்கு
ஓலைப் பொருளின் றென
உள்ளழியா
வேகத்தடல் வீரர் விளிந்தஎலாஞ்
சோகத் தொடி இறைஞ்சினர் சொல்லினரால்’’
– என பதறி சோகத்துடன் நிகழ்ச்சியை கூறினான்.

வலிமை மிக்க படைத்தலைவர்கள் இறந்ததைக் கேட்ட ராவணன் உள்ளம் பொங்கி மனம் வெதும்பினான். கொடிய நரகம் புகுந்தது போன்று அனல் மிகுந்து பெருமூச்சுவிட்டு நிலை தடுமாறி வருந்தினான். அடுத்து என்ன செய்வது யாரைப் பாசறைக்கு அனுப்புவது என சிந்தனையில் எண்ணங்கள் ஒட்டியவனாய் அமர்ந்திருந்தான். அந்தச் சமயம் அங்கு வந்த கரனின் மகன் மகரக்கண்ணன் வருத்தம் தோன்ற ராவணனின் முகத்தைக் கண்டான். நடந்த நிலைமையை அறிந்தான். ரத்தம் அனல் குழம்பாக வேகமெடுத்து இளரத்தம் பொங்கிக் கொதித்து.

“இலங்கையின் மன்னரே! என் அன்பும் பாசமும் மிகுந்த பெரிய தந்தையே, போரில் கலந்து கொள்ள எனக்கு ஓர் அரிய வாய்ப்பு தந்தருள வேண்டும். என் தந்தையைக் கொன்று உயிரை உண்டவனின் ஆவியை நான் போர்புரிந்து போர்க்களத்தில் வென்றிடுவேன். தலைவனே! வானுலகம் நிலவினும் எங்கு மறைந்து சென்றாலும் என்னுடைய தவ வலிமையினால் வென்றிடுவேன். என்னை வெல்லக் கூடிய வலிமை உடையவர் இப்பூவுலகிலும் விண்ணுலகிலும் யார் உளர்? கூறுங்கள் பார்ப்போம்.’’ என்றார்.

“மகனே! மகரக்கண்ணனே, நீ சிறியவன். ஆயினும் உன் தவ வலிமையில் சந்தேகம் எனக்கு இல்லையடா.. பலர் உயிர் துறந்து உள்ளனரே?’’ என்று ராவணன் மனம் கசிந்து உரைத்தான்.
“மன்னரே! என் தந்தை இழந்து என் தாய்ப் படும் பாட்டை நீங்கள் அறியாததா? எப்பொழுதும் அழுத கண்ணீர் துக்கத்தைச் சுமந்து இறுகிய முகமும் வாடிக் கிடக்கிறது. அதைக் காண என்னால் சகிக்க முடியவில்லை. என் உயிரினும் மேலான என் தாயின் அழுகைக்குக் காரணமானவர்கள் நம் எல்லைக்கு உட்பட்டு உள்ளனர். அவர்களை அழித்து என் தந்தையின் களங்கத்தைத் துடைப்பேன். அஞ்சி நடுங்கி பின் வாங்குவது நம் பரம்பரையிலேயே இல்லையே. போரில் வீரமரணம். எதிரியை அழித்தால் வெற்றிதான்.

துடி துடிக்கும் என் தோள்களுக்கும், குருதியையும் ருசி பார்க்கத் துடிக்கும் என் ஆயுதங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்குமாறு வேண்டுகிறேன். என் அன்னை நல்ல உணவை உண்டு பலகாலம் ஆயிற்று, கணவனைக் கொன்றவன் தலையை வெட்டிச் சாய்க்கும் வரை என் கடமைகளை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. பெருமை பெற்ற மாங்கலியத்தை துறக்க முடியாமல் தவிக்கும் என் தாயின் முகம் மலர என்னைப் போருக்கு செல்ல அனுமதி தாருங்கள்’’ எனப் பணிவுடன் கேட்டான்.

மகரக்கண்ணன், தனது தாய் மீது கொண்ட பாசமும் பகைவனை அழிக்க மனிதன் கொண்ட வீராவேசமும் அறிந்தான் ராவணன். மனதில் இருந்த கலக்கம் விலகியது. “தம்பி மகனே! மகரக்கண்ணனே.. சென்று உன் பழம் பகை தீர்த்துக் கொள்’’ என்று ராவணன் அனுமதி வழங்கினான். மனமகிழ்ந்து போருக்குப் புறப்பட்டான். அங்கே ஐந்து கோடி அரக்க வீரர்களுடன் போர்க்களத்தில் குதித்தான். மேருமலை அதனுடைய மூன்று சிகரங்களே திரிகூட மலையானதால், அம்மலைகள் புதைந்து போகுமாறு கடலென திரண்ட படைகள் வானரப் படையுடன் மோதினான், மகரக்கண்ணன்.

தன் தேரை ராமன் இருக்கும் இடத்தை நோக்கி ஓட்டிச் சென்றான். வெற்றி பொருந்திய பெரிய சக்கரங்கள் வண்டுகள் உலாவுகின்ற மாலையை அணிந்த பரந்த மார்பை உடைய மகரக்கண்ணன், கங்கை நீர் பாயக் கூடிய கோசல நாட்டின் மழை போன்ற கார்முகில் வண்ணன் ராமபிரானை நோக்கினான்.“என்னுடைய தந்தையை கொன்றவனே, உன்னிடத்தில் நான் கொண்ட பகையானது மும்மூர்த்திகளிடத்திலும் இல்லை. ஆனால், அப்பகையை உன் மீது கொண்டேன். ஆனால், உன்னை அழித்து என் தாயின் உள்ளம் குளிரச் செய்வேன். என் பழம் பெரும் பகையையும் (நீக்கி) தீர்த்துக் கொள்வேன்’’ எனச் சூளுரைத்தான். இப்படியாக கம்பர் வர்ணிக்கிறார்.

அவ்வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீ ராம பிரான், “வலிமை உடைய மகரக் கண்ணா.. உன் சினம் ஏற்புடையதே ஆகும். எனவே, உன் பகையை ஏற்றுக் கொண்டேன்’’ என புன்னகையுடன் அமைதியாக பொறுமையாக உரைத்ததைக் கண்டு வியந்தான். ராமபிரானின் பொறுமையைக் கண்டு அதிர்ந்தான். எத்தனை தெய்வீக அம்சம் பொருந்திய முகம் என ஒரு வினாடி தயங்கி நின்றான். பின்பு, தன்னிலையை மாற்றிக் கொண்டு, ஆயிரம் அம்புகளைக்கொண்டு தாக்கினான்.

லட்சுமணன் மீது 2000 கொடிய அம்புகள் மழையெனத் தொடுத்துப் பொழிகிறான். கோசலைநாட்டு மைந்தனே, மகரக் கண்ணனின் வில்லாற்றல் கண்டு வியந்தார். பின்னர், பேராண்மை உடையவன் மீது ஓர் அம்பு செலுத்தினான். அடுத்த நொடி, தன் தவ ஆற்றலை காண்பிக்க தொடங்கினான் மகரக்கண்ணன். தவசித்தினால் இடிகள் பல கோடிகள் விழுந்தன. பெரும் காற்று சீறிப்பாய்ந்து எழுந்தது. நாற்புறமும் பேயாட்டம் ஆடியது. வானரக் கூட்டங்கள் காற்று முன் எதுவும் செய்ய முடியாமல் திண்டாடின.

ஓடிப்போக முற்பட்டால், ஓடிய திசை எங்கும் அக்னி கவிழ்ந்துகொள்ள, புகையில் சிக்கிய வானரங்கள் நிலை தடுமாறி, ஆயிரம் கோடி வானரங்கள் மடிந்தன. ஊகித்து அறிந்த ராமபிரான், மகரக்கண்ணனின் மாயத்தன்மையை அறிந்தார். பின்னர், விபீஷணனிடம் கேட்டறிந்தார்.“இவ்வாறு இத்தனை பேர் மரணம் அடைவதற்குக் காரணம் என்னவோ?’’ என்று கேட்டதும், மகரக்கண்ணன் வரம் பெற்றதே வானரு சாஸ்திரம், வாயு சாஸ்திரங்களால் வில்லை எடுத்து கணைகளில் செலுத்தினான். எனக் கூறியதும், ராமபிரான் ஒரு கணையை செலுத்தினார். ஆச்சரியம்! மழையும் காற்றும் வானத்திலிருந்து மறைந்து ஓடி, கடலில் கலந்து விழுந்தன.

மகரக்கண்ணன் மாயத்தால் வரம்பில்லாத பல வடிவங்களை எடுத்தான். அடுத்து என்ன? எங்கு சென்று எவ்விடம் என்று அறியாமல் மறைந்தான். மாயத் தோற்றம் நின்று சிரித்தது. ராமபிரான் எத்திசை திரும்பும் போதும், மகரக்கண்ணன் பல உருவங்கள் தாங்கி நின்றான். இதில் அசல் எது? நகல் எது? என்று அறியாமல் தடுமாறினார். ஓர் அஸ்திரத்தில் கட்டுப்படுத்த இயலாமல் தயங்கினார். தன்னை வெல்ல இயலாது என்ற கர்வத்துடன் திரிந்த மரக்கண்ணன், அம்புகளை சரமாரியாகப் பொழிந்தான். ராமபிரான் விட்ட அம்பு, மகரக்கண்ணன் உடலில் பட்டு ரத்தம் சிந்தியது. ரத்தக் கசிவுடன் நிற்பதை அறிந்ததும், இந்த உருவம் கபட வேடதாரியின் ரத்தம் சிந்தி இருந்ததுதான் தாமதம், அடுத்த ஒரு நொடி ரத்தம் தோய்ந்த மகரக்கண்ணனின் மீது சரமாரியாக அம்புகள் பாயச்செய்தார்.

இறுதியில் ரத்தம் தோய்ந்த அடி சுவட்டில் அடிச்சுட்டு அருகே நின்றவர் மீது அம்புகள் பாய்ச்சினார். விதி நடத்தும் ஆச்சரியம் தொடர்ந்தது. உண்மை ரூபம் தோன்றியது. அவ்விடத்தில் மாண்டான் மகரக்கண்ணன். தந்தை மானத்தையும், தாயின் அழுகைக்காகவும் தன் தவவலிமையினால் துடைத்தெறிந்து, மீளாத்துயில் கொண்டான். வெற்றிவீரன் என்ற பெயரையும் பெற்றான்.

பொன்முகரியன்

 

The post பழம் பகைகொண்ட மகரக்கண்ணன் appeared first on Dinakaran.

Tags : Makarakannan ,Yuddha Kantam Kambaramayana ,Ravana ,Karan ,Mahararadshasan ,Makarak Kannan ,Makara ,Makarakannan… ,
× RELATED சீதாபிராட்டிக்கு அனுமன் கூறிய அடையாளங்கள்!