×
Saravana Stores

உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி இளைஞர் உயிரிழந்தது குறித்து விசாரிக்க குழு அமைப்பு.. 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!!

புதுச்சேரி: உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி இளைஞர் ஹேமசந்திரன் (26) உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி நகரைச் சேர்ந்தவர் செல்வதான்(52). இவர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஹேமச்சந்திரன் (26) மற்றும் ஹேம்ராஜன் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஹேமச்சந்திரன் பிஎஸ்சி ஐடி முடித்துவிட்டு டிசைனிங் வேலை செய்து வருகிறார். ஹேமராஜன் சித்தா பர்மசிஸ்ட் வேலையில் உள்ளார். இதில் ஹேமச்சந்திரன் உடல் பருமன் காரணமாக (256 கிலோ) எடையை குறைக்கவேண்டும் என்பதற்காக யுடியூப் மூலமாக மருத்துவர்களை தேடியுள்ளார். அப்போது சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு அங்குள்ள மருத்துவரிடம் தனது உடல் எடையை குறைப்பது குறித்து பேசியுள்ளார்.

இதையடுத்து கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அப்போது ஹேமச்சந்திரனுக்கு நீரிழிவு நோய் இருப்பதால் சில மருத்துவ பரிசோதனைகளை செய்தபின் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதாக தெரிகிறது. பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் செல்வநாதன் மருத்துவமனைக்கு சென்று, அறுவை சிகிச்சைக்கு எவ்வளவு செலவு ஆகும் என கேட்டுள்ளார். அப்போது ரூ.8 லட்சம் ஆகும் என கூறவே. ரூ.4 லட்சம் செலவில் சிகிச்சை அளிப்பதாக கூறிய மற்றொரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு கடந்த 21ம் தேதி அறுவை சிகிச்சைக்காக ஹேமச்சந்திரன் சேர்ந்துள்ளார். பின்னர் மருத்துவ பரிசோதனை செய்து மறுநாள் 22ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை தொடங்கிய சில மணி நேரத்தில் ஹேமச்சந்திரனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. உடனே குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அங்கிருந்த மருத்துவர்கள் செல்வநாதனிடம் கூறிய நிலையில், சிறிதுநேரத்தில் ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிரச்சியடைந்த செல்வநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் தவறான சிகிச்சையால் மகன் உயிரிழந்து விட்டதாகவும், இதற்கு காரணமான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர். பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்குமாறு பம்மல் டி-காவல் நிலை செல்வநாதன் உடவே புகார் அளித்தார் அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிரிழந்த இளைஞரின் உறவினர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் குழு அமைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்றும் இளைஞரின் உறவினர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்து இருந்தார். அதன் அடிப்படையில் உடல் பருமன் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.2 இணை இயக்குனர்கள் கொண்ட குழுவை அமைத்த மருத்துவத்துறை, இளைஞர் உயிரிழப்பு குறித்து 2 நாட்களில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கவும் ஆணையிட்டுள்ளது.

The post உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி இளைஞர் உயிரிழந்தது குறித்து விசாரிக்க குழு அமைப்பு.. 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Hemachandran ,Selvathan ,Muthialpet, Puducherry ,Dinakaran ,
× RELATED தீபாவளியை ஒட்டி கட்டட...