புதுச்சேரி: உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த ஐடி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன் (52). இவர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஹேமச்சந்திரன் (26) மற்றும் ஹேமராஜன் என்ற இரட்டை ஆண் மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் ஹேமச்சந்திரன் பிஎஸ்சி ஐடி முடித்துவிட்டு டிசைனிங் வேலை செய்து வருகிறார். இவர், உடல் பருமன் காரணமாக (156 கிலோ) எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக யூடியூப் மூலமாக மருத்துவர்களை தேடியுள்ளார்.
அதன் மூலம் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது ஹேமச்சந்திரனுக்கு நீரிழிவு நோய் இருப்பதால் சில மருத்துவ பரிசோதனைகளை செய்தபின் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதாக தெரிகிறது. அறுவை சிகிச்சைக்கு ரூ.8 லட்சம் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் ரூ.4 லட்சம் செலவில் அந்த சிகிச்ைச அளிப்பதாக கூறிய மற்றொரு மருத்துவமனையில் கடந்த 21ம் தேதி அறுவை சிகிச்சைக்காக ஹேமச்சந்திரனை சேர்த்துள்ளனர்.
பின்னர் மருத்துவ பரிசோதனை செய்து மறுநாள் 22ம்தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை தொடங்கி சிலமணி நேரத்தில் ஹேமசந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனே குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அங்கிருந்த மருத்துவர்கள் செல்வநாதனிடம் கூறிய நிலையில், சிறிது நேரத்தில் ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தவறான சிகிச்சையால் மகன் உயிரிழந்து விட்டதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பம்மல் காவல் நிலையத்தில் செல்வநாதன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post 156 கிலோ உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த ஐடி ஊழியர் உயிரிழப்பு appeared first on Dinakaran.