- உச்ச நீதிமன்றம்
- மோடி
- ஆர்.எஸ். பாரதி
- தேர்தல் ஆணையம்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஸ்ரீபெரும்புதூர்
- எம்ஐடி கல்லூரி
- குரோம்பேட்டை
- திமுக
- ஆர்.எஸ்.பார்தி
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த 19ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நேற்று கல்லூரிக்கு சென்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் அளித்த பேட்டி: மோடி ஆட்சியில் எது எப்படி நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. தேர்தல் ஆணையமே நடுநிலையை தவறிவிட்டது. எனவே. சந்தேகங்கள் வலுக்கும் காரணத்தால் ஒவ்வொரு நாளும் கண்ணும் கருத்துமாக கண்காணிப்பது எங்கள் கடமை. ஏனென்றால் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
என்டிஏ கூட்டணி தோல்வியடையப்போவது உறுதி. தற்போது பிரசாரத்தின்போது அவரது முகத்திலே தோல்வியின் பயம் வந்துவிட்டது. எனவே தான் அவர் தேவையில்லாமல் சர்ச்சைக்குரிய பேச்சுகளை பேசுகிறார்.பதவி பிரமாணம் ஏற்ற பிறகு ஒரு குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துகின்ற அளவிற்கு பேசுகிறார் என்றால், அது எந்த விதத்தில் நியாயம். மத கலவரத்தை நடத்தி அதன் வாயிலாகவே இந்த தேர்தலை நடத்தி முடித்து விடலாமா என்ற வஞ்சக எண்ணத்தில் பேசினாரா என்று சந்தேகம் ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாதபடி நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இந்தியா பிரிகின்ற காலத்தில் ஜின்னா அழைத்தபோது நாங்கள் பிறந்த மண்ணில் தான் இருப்போம் என இருந்த இஸ்லாமியர்களை களங்கப்படுத்திடும் வகையில் பிரதமரின் பேச்சு உள்ளது.
உத்தரபிரதேசத்தில் பெரிய வெற்றி வரும் என மோடி எதிர்பார்க்கிறார். ஆனால், அங்கே 30 முதல் 35 சீட்டுகள் மட்டுமே அவர்களுக்கு வரும். இந்திய அளவில் இந்தியா கூட்டணி 380க்கும் மேற்பட்ட சீட்டுகளை பெற்று வெற்றிபெறும். மோடி எந்த காலத்தில் ஒரே பேச்சை பேசி இருக்கிறார். பேச்சை மாற்றி மாற்றி பேசுவதில் அவர் வல்லவர். இந்தியாவில் உள்ள பிரதமர்களிலேயே கீழ்த்தரமாக பேசும் பிரதமர் இவரை தவிர வேறு யாரும் இல்லை. அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
The post மத கலவரம் நடத்தி வெற்றி பெற நினைக்கும் மோடி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம்: தேர்தல் ஆணையத்துக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை appeared first on Dinakaran.